Advertisment

தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னன்- தஞ்சையில் ராஜராஜசோழன் சதயவிழா கோலாகலம்

அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும், சிறந்து விளங்கிய மாமன்னன் ராஜராஜ சோழன் இராசகேசரி என்ற பட்டம் பூண்டு கி.பி. 1014 வரை ஆட்சிபுரிந்து தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தார்.

author-image
WebDesk
New Update
Thanjavur

Thanjavur raja raja cholan sadhaya vizha celebration

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

Advertisment

தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் ராஜ ராஜ சோழனின் பிறந்தநாளை சதய விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

அதன்படி, இந்தாண்டு இரண்டு நாட்கள் அரசு விழாவாக ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்படுகிறது. சதயவிழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை ஒட்டி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

ராஜ ராஜ சோழன் சதய விழாவான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஏற்கனவே மாமன்னன் ராஜராஜசோழன்  பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் சதயவிழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பானது தஞ்சை மாவட்டத்திற்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும், சிறந்து விளங்கிய மாமன்னன் ராஜராஜ சோழன் இராசகேசரி என்ற பட்டம் பூண்டு கி.பி. 1014 வரை ஆட்சிபுரிந்து தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தார்.

தந்தை வழியில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவரான செம்பியர் குடியிலும், தாய் வழியில் சங்க காலத்திலிருந்து சிறந்த திருமுடிக்காரி போன்ற பெருந்தகை பிறந்த மலையமான் குடியையும் சேர்ந்த இப்பெருமகனின் இயற்பெயர் அருள்மொழிவர்மன் என்பதாகும்.

Thanjavur

உலகமே வியக்கும் இராசராசேச்சுரம் என்றும் தஞ்சைப் பெருவுடையர் திருக்கோயிலை எடுத்த சிவபாத சேகரனாம் இப்பெருமன்னன் வைணவம், சமணம், பௌத்தம் போன்ற எல்லா சமயங்களுக்கும் ஆக்கம் அளித்து சமநோக்கோடு வாழ்ந்து காட்டியவர்.

தில்லையில் செல்லரித்த நிலையில் மூடிக்கிடந்த மூவர் தேவாரப் பாக்களை நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு மீட்டு அனைத்து கோயில்களிலும் தேவாரம் ஓதச் செய்ததோடு, சைவ ஆகமங்கள் எனப் போற்றப் பெறும் திருமுறைகளைத் தொகுத்து அளித்த பெருமகனும் ராஜராஜ சோழன்தான். ஐப்பசிச் சதயநாளில் பிறந்த பெருந்தகையாளன் என்பதைக் கல்வெட்டுக்கள் பறைசாற்றுகின்றன.

சேரநாட்டை இராசராசன் வெற்றிகண்ட போது, அங்கு சதயநாளில் திருவிழாக் கொண்டாடச் செய்தான் என்பதைக் கலிங்கத்துப்பரணி"சதயநாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன்" என்று கூறுகிறது. இத்தகைய பெருமைக்குரிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பெரிய கோயிலில் நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம், பரம்பரைஅறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணைமேயர் மரு.அஞ்சுகம் பூபதி, துணைத் தலைவர் சந்திரசேகரமேத்தா, தருமபுரஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாநகர நலஅலுவலர் மரு.சுபாஷ் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment