முத்தாலங்குறிச்சி காமராசு
தாமிரபரணி நதி. வற்றாத ஜுவ நதி. இந்நதி பொதிகை மலையில் தோன்றி வங்களா விரிகூடாவில் புன்னகாயல் என்னுமிடத்தில் கலக்கிறது.
புன்னகாயல்.
2500 வருடங்களுக்கு முன்பு ஏற்றுமதியில் சிறப்புற்ற விளங்கிய பாண்டியரின் கொற்றை துறை முகம் அருகில் இருக்கும் அற்புதமான ஊர். தமிழகத்தின் முதல் அச்சுகூடம், முதல் கல்லூரி உள்பட பல சிறப்புகளை அடங்கிய நல்லூர்.
புன்னகாயலில் தாமிரபரணி ஆறு கடலுடன் இணையும் இடத்தினை சங்குமுக தீர்த்தம் என்கிறார்கள்.
அகத்தியர், கடலரசன் உள்பட பல சித்தர்கள் இங்கு நீராடி நற்கதி பெற்றுள்ளனர். எனவே இங்கு தீர்த்தம் எடுத்து கோயிலுக்கு கும்பாபிசேகம் செய்தால் சிறப்பென்பார்கள் இந்து மக்கள்.
இதற்காக இவர்கள் நதி கடலுடன் கலக்கும் பயங்கரம் நிறைந்த புனித இடத்துக்கு சவாலான பயணத்தில் செல்வார்கள்.
இவ்விடத்துக்கு புன்னகாயல் அல்லது பழைய காயலில் இருந்து படகு மூலம் செல்லலாம். நடந்து செல்லும்போது நல்ல வழிகாட்டி வேண்டும்.
ஏன் என்றால் இங்கு தாமிரபரணி நதி, ஆறு பிரிவாக பிரிகிறது. ஆங்காங்கே பல தீவுகளை கொண்டுள்ளது. செல்லும் மக்கள் இந்த தீவுகளையும் ஆற்று பிரிவுகளையும் கடந்து தான் செல்லவேண்டும். அதிகமான புதைகுழிகள் இங்கு உண்டு. செல்லும் போது தண்ணீர் குறைவாக இருக்கும், வரும் போது ஆளை மூழ்கடித்து விடும். சங்குமுகத்துக்கு தீர்த்தம் எடுக்க செல்பவர்கள் மூழ்கி தீர்த்தம் எடுத்து விட்டு, திரும்பும் முன்பு கடல் அலைஅடித்து அவர்களை இழுத்தும் சென்று விடும். அந்த அளவுக்கு சீறிப்பாயும் கடல் அலையும், அமைதியாக இருந்து உள்ளே நம்மை இழுத்துகொள்ளும் அகழிகளையும் கொண்ட இடம்.
இங்கு ஒரு பெண் ஓசையே படாமல் சாதனை புரிந்து வருகிறார். புன்னகாயலில் இருந்து ஆறு ஆறுகளை தாண்டி அவர் தினமும் தீவுக்குள் இருக்கும் புனித தோமையார் ஆலயத்துக்கு நடந்தே சென்று தீபம் ஏற்றி வருகிறார்.
அவர் பெயர் ரமீ.
திருவிழா காலங்களில் கூட பல படகுகள் இங்கு வந்தாலும் அவர் படகில் ஏறுவதில்லை. அவரைக் காண புன்னகாயலில் இருந்து படகில் பயணமானோம். படகு புன்னகாயல் முகத்துவாரத்தில் கிளம்பி கடலுக்குள் சென்று பின் திரும்பி தாமிபரணி ஆற்றுக்குள் நுழைந்தது.
ஆர்பாரிக்கும் அலை.. "நன்றாக பிடித்துக்கொள்ளுங்கள். காமராவை உள்ளே வையுங்கள். அலை வித்தியாசமாக அடிக்கிறது. படகு கவிழ்ந்தாலும் கவிழ்ந்து விடும்" என படகோட்டியின் எச்சரிக்கை எங்களை திடுக்கிட வைத்தது.
தூரத்தில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் தெரிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் அலைகளும் எங்களை மிரட்டியது. அதை எல்லாம் மீறி தாமிரபரணி ஆற்றுக்குள் எங்கள் படகு விரைந்தது. அந்த இடம் தான் சங்குமுக தீர்த்தம். புனித தீர்த்தம். கை இரண்டையும் மேலே தூக்கி வணங்கி விட்டு மீண்டும் படகில் தாமிரபரணி திசையில் எதிர்நோக்கி பயணம் செய்தோம்.
தூரத்தில் புனித தோமையார் ஆலயம் தெரிந்தது. கடலுக்குள்ளே அலைகள் உரச அருகிலேயே இருந்தது ஆலயம். சிறிய தீவு தான். அங்கே சென்றோம். அசனம் நடந்து கொண்டிருந்தது.
வேண்டுதல் நிறைவேறினால், உடனே இங்கு வந்து அசனம் செய்பவர்கள் ஏராளம். தவம் இருப்பதற்காக குடில் கட்டப்பட்டு இருந்தது. அதில் பலர் தவமேற்றிகொண்டிருநதார்.
அங்கு தான் ரமீ அம்மாள் சிலுவையில் எண்ணெய் தோய்த்து பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தார்.
"இது சாதரண சிலுவை இல்லை. ஒரு காலத்தில் இந்த தீவில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்களுக்கு கடலில் இருந்து வந்து கிடைத்த சிலுவை. உயிரோட்டமாக குரல் கொடுத்து அவர்கள் மூலமாக இந்த இடத்துக்கு வந்த சிலுவை. இந்த சிலுவையில் எண்ணெய் தோய்த்து பக்தர்களுக்கு கொடுத்தால் நோயெல்லாம் தீர்ந்து விடும்" என்றார்.
இவர் வரும் பக்தர்களுக்கு வெள்ளை கயிறு ஒன்றை கையில் கட்டி விடுகிறார். அடுத்த வருடம் வரும்போது திருமணம் முடிந்து விடும் என்றும் தீர்க்கமாக சொல்கிறார். நடந்து விட்டது என்று மறு வருடம் ஜோடியுடன் வரும் மக்கள் சாட்சியாகிறார்கள்.
இந்த தீவுக்கு தினமும் ரமீ வருவதே பெரும் போராட்டம்தான். புன்னகாயலில் இருந்து 6 பிரிவாக ஓடும் தாமிரபரணி ஆற்றைக் கடந்து, இந்த குட்டி தீவுக்கு வருகிறார். அது பற்றிக் கேட்டால், "தோமையாரை நினைத்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வந்து விடுவேன். நமக்கு இந்த படகெல்லாம் ஒத்து வாராது. கூட்டம் அதிகம் வந்து படகில் கூப்பிட்டாலும் போக மாட்டேன்" என்றார்.
சரி. அமாவாசை, பௌர்ணமி காலத்தில் கடல் பொங்குமாமே. அந்த நேரம் எப்படி வருவீர்கள்? என்று கேட்டால், "எனக்கு தெரியும். சூரியன், நிலவு இதை பார்த்துக்கொண்டு. எப்போது கடல் பொங்கும் எப்படி பொங்கும் என்பதை அறிந்து, ஆறுகளை கடந்து கோயிலுக்கு வந்து தீபம் போடுவேன்" என்றார்.
ரமீ அக்காளுக்கு திருமணம் ஆக வில்லை. புனித தோமையார் ஆலய சேவைக்காகவே வாழ்ந்து வருகிறார். தாத்தா ஜோசப் காலத்திலேயே இந்த கோயில் கணக்கு பிள்ளையாம். அவருக்கு பிறகு மாமா அந்தோணி பர்னாந்து, பெரியம்மாள் பிரகாசியம்மாள் தொடர்ந்து ரமீ என ஆலயபணியை செய்து வருகிறார், ரமீ அக்காள். தனது 6 வயதில் தீபம் போட வந்தவர், 50 வயது ஆகியும் அதை விடாமல் செய்துகொண்டிருக்கிறார்.
‘‘முன்பெல்லாம் இங்கு நரி, நாகம் போன்ற கொடிய விலங்குகள் வசிக்கும். ஆனால் தோமையார் புண்ணியத்தில் எங்களை எதுவும் செய்யாது’’ என்று சொன்னவர், "எங்கள் ஊருக்கு சவேரியார் சொன்ன வாக்கு. நீராலும் நெருப்பாலும் அழிவு வராது. சுனாமி வந்த போது ஒரு பனை உச்சிக்கு அலைகள் எழும்பியது. புன்னகாயலே அழிந்து விடும் என்றார்கள். பலர் ஊரை காலி செய்து விடலாம் என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால் சவேரியார் கோயிலில் அவர் சுருபத்தின் பாதத்தினை கழுவி அந்த தண்ணீரை கொண்டு வந்து கடலில் ஊற்றினோம். என்ன ஆச்சரியம் ஆழி பேரலை அங்கு வராமலேயே சென்று விட்டது" என்று சொல்லும் போது ஆச்சரியம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.