உங்கள் ஸ்மார்ட்போனை எடுக்கும் அந்த தொடர்ச்சியான தூண்டுதலை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நோட்டிபிகேஷனும் இல்லாதபோதும், போனை அன்லாக் செய்து, செயலியைத் திறந்து மூடி, பிறகு மற்றொன்றைத் திறந்து, ரீல்ஸ் அல்லது ஷார்ட்ஸ் பார்த்து, சில பதிவுகளுக்கு லைக் போட்டு, சில மீம்களைப் பகிர்ந்து, ஒரு மணிநேரம் வீணாகிப் போனதுண்டா? இவையெல்லாம் எந்த ஒரு உண்மையான காரணமும் இல்லாமல் நடந்திருக்கலாம் அல்லது, நெருங்கிய நண்பருடன் காஃபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கும்போது, பழக்கவழக்கத்தில் உங்கள் மொபைலை எடுக்கத் தோன்றியிருக்கிறதா? நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது மொபைலை எட்டிப் பார்த்து, ஒரு முறைப்புடன் திரும்பி வைத்த அனுபவம் உண்டா?
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உங்களுக்கும் அடிக்கடி நேர்ந்தால், நீங்கள் தனியாக இல்லை. ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் உலக அளவில் அதிகரித்து வரும் கவலையாக மாறியுள்ளது. இந்தியப் பயனர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்கள். இந்நிலையில், மேற்கு நாடுகளில் சிலர் தங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வித்தியாசமான மெத்தாஃபோனை பயன்படுத்தி வருகின்றனர்.
மெத்தாஃபோன் என்றால் என்ன?
மெத்தாஃபோன் (Methaphone) என்பது போன் வடிவ அக்ரிலிக் பலகை அவ்வளவுதான். இதன் எடை, வடிவம் ஒரு போனைப் போன்ற உணர்வை அளிக்கும். இதில் திரை இல்லை, நெட் இல்லை, வேறு எதுவும் இல்லை. நீங்கள் அதை கையில் எடுத்து, எந்த நோக்கமும் இல்லாமல் ஸ்க்ரோல் செய்வதுபோல செய்து, மீண்டும் உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். ரீல்ஸ் பார்த்து மணிநேரங்கள் வீணாகாது.
கூகிள், ஃபேஸ்புக்கின் முன்னாள் சந்தைப்படுத்தல் நிர்வாகியான எரிக் ஆன்டோனோவ் என்பவர்தான் இந்த ஸ்மார்ட்போன் வடிவ பலகையை, கலைப் projectsமாகவும், போன் அடிமைத்தனத்தைக் குறைப்பதற்கான நடத்தை கருவியாகவும் உருவாக்கியுள்ளார். அவர் தனது நண்பர்களுக்கு மாதிரிகளை அனுப்பியபோது, டிக்டாக் கிரியேட்டர் கேத்ரின் கோட்ஸால் (Catherine Goetze) வெளியிடப்பட்ட ஒரு வீடியோ வைரலானது. இதனால் முதல் 100 பீஸ்களும் உடனடியாக விற்றுத் தீர்ந்தன. இதன் விலை அமெரிக்காவில் $25. இந்தியாவில் வாங்குவதற்கு தற்போது கிடைக்கவில்லை என்றாலும், இணையதளத்தில் ஆர்டர் செய்ய முடியும். இது ஒரு குழந்தைகள் விளையாடும் போன் போல இல்லாமல், பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
"மெத்தாஃபோன் சுவாரஸ்யமான கருத்து. ஏனெனில் இது நேரடியாகப் போன் பயன்படுத்தும் தூண்டுதலுடன் போராடாமல், அதை திசைதிருப்ப முயற்சிக்கிறது. பல வழிகளில், புத்திசாலித்தனமானது. ஒரு பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது பெரும்பாலும் எதிர்ப்பை உருவாக்குகிறது என நடத்தை உளவியல் காட்டுகிறது. போன் வடிவத்தில் ஒன்றை வைத்திருப்பது போன்ற ஒரு பழக்கமான உடல்ரீதியான சடங்கு, உண்மையான ஈடுபாடு இல்லாமல் ஒரு ஆறுதலான சிக்னலை அளிக்க முடியும்" என்கிறார் குருகிராமில் உள்ள கேட்வே ஆஃப் ஹீலிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் சந்தினி துக்னைட்.
மொபைல் போன் இல்லாமல் கவலையாகவோ அல்லது அமைதியற்றதாகவோ உணருபவர்கள் இந்த கருவியால் பயனடையலாம் என்று, மொபைல் போன் அடிமைத்தனத்தால் போராடும் பலரைப் பார்க்கும் எம்பவர், ஆதித்யா பிர்லா எஜுகேஷன் டிரஸ்டின் உளவியலாளர் ருதுஜா வலவால்கர் கூறுகிறார். "இது தற்காலிகமாக வேலை செய்யக்கூடும். சும்மா இருக்கும் போதும், சமூகக் கவலையின் போதும், சலிப்பின் போதும் போனை கையில் எடுக்கும் உடல் ரீதியான அனிச்சையை திருப்திப்படுத்தும். டிஜிட்டல் யுகத்தில் பெரியவர்களுக்கான 'பாசிஃபையர்' (pacifier) போல இதைக் கருதலாம். இது தொடர்ந்து திரைப் பயன்பாட்டால் அதிக தூண்டப்பட்டவர்களுக்கு அல்லது சீரற்ற உணர்வு கொண்டவர்களுக்கு அமைதியைத் தரும்."
நீண்டகாலத் தீர்வாக இருக்க முடியுமா?
"மெத்தாஃபோன் தொட்டுப் பார்க்கும் தேவையை பூர்த்தி செய்யலாம், ஆனால் நோட்டிபிகேஷன்களைப் பார்ப்பது, ஸ்வைப் செய்வது அல்லது ஸ்க்ரோல் செய்வதன் மூலம் வரும் மூளையின் டோபமைன் சுழற்சியில் ஈடுபடாது. எனவே, கை 'பிஸியாக' இருந்தாலும், மூளை தூண்டுதலை எதிர்பார்க்கிறது ஆனால் எதுவும் பெறாததால் நுட்பமான சோர்வை அனுபவிக்கலாம். இது பின்னர் எரிச்சலை அதிகரிக்கலாம் அல்லது மீண்டும் ஸ்க்ரோல் செய்யத் தூண்டலாம், குறிப்பாக அதிக தொழில்நுட்பச் சார்பு கொண்டவர்களுக்கு," என்கிறார் டாக்டர் துக்னைட்.
மொபைல் பயன்பாட்டைக் குறைக்க நிபுணர்கள் கூறும் வழிகள்:
மெத்தாஃபோன் தொட்டுப் பார்க்கும் கருவி. தற்காலிக தீர்வே தவிர, நீண்டகால தீர்வாக அமையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போன் பயன்பாடு கட்டுப்பாட்டை மீறி இருந்தால், மனநல நிபுணரை அணுகுவது மிக முக்கியம் என்கின்றனர் நிபுணர்கள். மொபைல் போன் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் கவனிக்க முடியாதவர்களுக்குப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழிகள்:
போனை வேறு அறையில் வைக்கவும். ஆஃப்லைன் பழக்கங்களுக்கு நேரம் ஒதுக்கவும் (உடற்பயிற்சி, பொழுதுபோக்குகள், அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவது). போனில் உள்ள ஸ்கிரீன் டைம் கண்ட்ரோல் மற்றும் ஆப் லிமிட் அம்சங்களைப் பயன்படுத்தவும். குளியலறைக்கோ அல்லது இரவு உணவு மேசைக்கோ போனை கொண்டு செல்ல வேண்டாம். கவனத்தை சிதறடிக்கும் செயலிகளை நீக்கவும். மனநல நிபுணரை அணுகவும்.