திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்களின் கூட்டத்தால் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசலப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அந்தக் கூட்டம் இன்றும் தொடர்ந்தது. அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய மலைப்பாதைகளில் பாதயாத்திரையாகவும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
வார விடுமுறை மற்றும் 3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களும் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவருகின்றனர். தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு நீர், மோர், உணவு, குடிநீர் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டுவருகிறது.
சனிக்கிழமை ஏழுமலையான் கோவிலில் 82,886 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும், 44,234 பேர் முடிக்காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் வருமானம் ரூ.4.09 கோடி வரை கிடைத்துள்ளது.
மக்களவை மற்றும் ஆந்திரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் வெளியீடுக்கு பின்னர் வரும் நீண்ட விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தக் கூட்டம் திங்கள்கிழமையும் (ஜூன் 16) காணப்படும் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“