வெற்றிக்கரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தோனி - சாக்ஷி காதலை சேர்த்து வைத்தது யார்? என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சீக்ரெட்டை தோனியின் மனைவி சாக்ஷி பகிர்ந்துள்ளார்.
தோனி - சாக்ஷி :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு எவ்வளவு ரசிகர்களோ அதே அளவிற்கு அவரின் குடும்பத்தின் மீது ரசிகர்கள் அளவுக்கு அதிகமான மரியாதை வைத்துள்ளனர்.
தோனியின் செல்ல மகள் ஜிவாவை கொஞ்சுவது, மனைவி சாக்ஷியை அண்ணியார் என அழைத்து அவர்களுக்கு தனியாக ஃபேன்ஸ் க்ளப் வைக்கும் அளவிற்கு எக்ஸ்டீரிம் லெவல் தோனி வெறியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தோனியின் கிரிக்கெட் உலகை மட்டுமில்லை,அவரின் பள்ளிக்காலம், முதல் காதல், திருமணம் என அவரின் வாழ்க்கை முறை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் விதமாக தோனி பயோ கிராபி திரைப்படம் வெளியாகியது.
அதில், அவரின் வாழ்க்கை மிக அழகாக படமாக்கப்பட்டது. குறிப்பாக சாக்ஷியை தோனி சந்தித்தது, அவரின் திருமணம் என சுவாரசயமான பல தகவல்கள் படத்தில் பகிரப்பட்டிருந்தனர். இந்நிலையில் தோனி - சாக்ஷி காதல் சேர காரணமாக இருந்த கிரிக்கெட் வீரர் பெயரை சாக்ஷி தற்போது வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் சாக்ஷியின் பிறந்த நாள் விழா மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள்,இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்துக் கொண்டிருந்தனர். தனது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பலருக்கு சாக்ஷி சமூக வலைதளத்தில் நன்றி கூறினார்.
அப்போது சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் ராபின் உத்தப்பா மற்றும் அவரது மனைவியுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், "இவருக்கு நன்றி. இவர் தான் மஹியும் நானும் இணைய காரணம்" என குறிப்பிட்டு இருந்தார்.
இதன் மூலம் தோனி - சாக்ஷி காதலுக்கு உதவியவர் உத்தப்பா என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. ராபின் உத்தப்பா 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் தோனியின் தலைமையில் ஆடியவர். அப்போதிருந்து தோனியும், உத்தப்பாவும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், உத்தப்பா எப்படி தோனிக்கு சாக்ஷி பற்றி கூறினார்? என்ற கேள்வி ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது. இதை தெரிந்துக் கொள்ள சாக்ஷியின் அடுத்த பிறந்த நாள் வரை காத்திருக்க வேண்டும் போல...