/indian-express-tamil/media/media_files/2025/08/11/microplastics-2025-08-11-11-38-34.jpg)
சமையலறையில் மறைந்திருக்கும் நஞ்சு; லான்செட் ஆய்வு கூறுவது என்ன? டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கொள்கலன்களில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் எவ்வாறு நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கி உள்ளார்.
ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் சுமார் 10 லட்சம் முதல் ஒரு கோடிக்கும் அதிகமான பிளாஸ்டிக் நானோ துகள்கள் இருக்கலாம் என்றும், இவை நமது ரத்தம் வழியாக இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்குள் ஊடுருவக்கூடியவை என்றும் டாக்டர் கார்த்திகேயன் எச்சரித்தார். மேலும், கர்ப்பிணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், பிறக்கும் குழந்தைகளும் இந்த அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.
பிளாஸ்டிக்கின் அபரிமிதமான வளர்ச்சி
1950களில் 2 மெகாடன்களாக இருந்த பிளாஸ்டிக் உற்பத்தி, இன்று 475 மெகாடன்களாக, அதாவது 2,750 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இதய நோய்கள் மற்றும் மாரடைப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். லான்செட் ஆய்வு கட்டுரையை மேற்கோள் காட்டிய டாக்டர் கார்த்திகேயன், பிஸ்பெனால் ஏ (BPA) போன்ற வேதிப்பொருட்கள் காரணமாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இதய நோய்களும், மாரடைப்புகளும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்
சமையலறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், உணவு சேமிப்புப் பெட்டிகள், மற்றும் மைக்ரோவேவில் சூடாக்கும் பாத்திரங்கள் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் கலப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக சூடான உணவு மற்றும் தண்ணீர், பிளாஸ்டிக் துகள்களை எளிதாக வெளியிட்டு, நம் உடலுக்குள் கலக்கிறது.
இந்த ஆபத்தான சூழலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான மாற்று வழிகளையும் டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைத்துள்ளார். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி அல்லது ஸ்டீல் பாட்டில்கள், பிளாஸ்டிக் கரண்டிகளுக்குப் பதிலாக மரத்தாலான கரண்டிகள், மற்றும் உணவு சேமிப்பிற்கு செராமிக் கொள்கலன்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் அபாயத்தை குறைக்க முடியும் என்றார்.
நெல்லிக்காய், மஞ்சள், கறிவேப்பிலை, இஞ்சி, தேங்காய் தண்ணீர், மற்றும் நார்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள பிளாஸ்டிக் நச்சுக்களை வெளியேற்றலாம். கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்வதன் மூலமும், வீட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதன் மூலமும் நாம் இந்த மாற்றத்திற்கு உதவலாம். இந்த எளிய வழிமுறைகளை 3 மாதங்களுக்குப் பின்பற்றுவதன் மூலம், நம் உடல்நலத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண முடியும் என்று டாக்டர் கார்த்திகேயன் உறுதியளிக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.