தேனி முத்துத்தேவன்பட்டி டெலிகாம் இன்ஜினியர் கலைராஜன் 31. பிரான்ஸைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் மரியனை 31, காதலித்து நேற்று பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் விமான நிலையத்தில் தொலை தொடர்பு பிரிவில் கலைராஜன் பணிபுரிகிறார். இவருக்கும், அதே நாட்டைச் சேர்ந்த மரியனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று திருமணம் தேனி வீரபாண்டி தனியார் மண்டபத்தில் நடந்தது.
இந்த காதல் திருமணம் குறித்து கலைராஜன் பேசுகையில், "2013ல் செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதன் முறையாக மரியனை சந்தித்தேன். பின் மேற்படிப்பிற்காக 2017ல் பிரான்ஸ் சென்ற போது மீண்டும் சந்தித்தேன். சில ஆண்டுகள் நண்பர்களாக பழகி வந்தோம். சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நட்பு சில ஆண்டுகளில் காதலாக மாறியது. இரு வீட்டினரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். சில மாதங்களுக்கு முன் பாரிசில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். பின் சொந்த ஊரில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.
அவரது உறவினர்களுடன் ஒரு மாதத்திற்கு முன் சொந்த ஊர் வந்து திருமண ஏற்பாடுகளை செய்தோம். உறவினர்களுடன் உரையாட மரியன் தமிழ் கற்று வருகிறார். சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்ய இருவரும் திட்டமிட்டு உள்ளோம். கூட்டுக்குடும்பம், நம் கலாசாரம் பிடித்துள்ளதாக மனைவியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“