தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறுகின்றன. மேலும் குடமுழுக்கிற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்குச் செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஜூலை 4 முதல் 6 ஆம் தேதி வரை சென்னை. திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கும் ஜூலை 7 அன்று திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்காக டிஎன்எஸ்டிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை கோட்டம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த மூன்று தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு இயக்கப்படவுள்ளது.