விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரசியலுக்கு வருவதற்கு முன்பு தான் 35 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய தடய அறிவியல் துறை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தென் இந்தியாவில் வலுவான ஒரு தலித் கட்சித் தலைவராகவும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார் வி.சி.க தலைவர் திருமாவளவன். தற்போது வி.சி.க-வுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 4 எம்.எல்.ஏ.க்களும் நாடாளுமன்றத்தில் 2 எம்.பி.க்களும் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் திருமாவளவன், 35 ஆண்டுகளுக்கு முன் தான் பணியாற்றிய தடய அறிவியல் துறை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தலித் பேந்தர் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவராக தலித் அரசியலில் களம் கண்ட திருமாவளவன், ஆரம்பத்தில் தடய அறிவியல் துறையில் பணி புரிந்தார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அரசுப் பணியை ராஜினாமா செய்தார். தலித் பேந்தர் ஆஃப் இந்தியா விடுதலைச் சிறுத்தைகளாக மாற்றினார், மூன்று முறை எம்.பி., தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் வலுவான தலித் தலைவராக திகழும் திருமாவளவன், 35 ஆண்டுகளுக்கு முன் தான் பணியாற்றிய தடய அறிவியல் துறை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் தனது எக்ஸ் பதிவில் வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், “மதுரை மாநகரில் நான் 35 ஆண்டுகளுக்கு முன்னால் பணியாற்றிய தடய அறிவியல் ஆய்வக அலுவலகத்திற்கு இன்று திடிரென சென்று பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றேன்.
என்னோடு பணியாற்றிய திரு.காஜா அவர்கள் தற்போது துணை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
அவர் என்னை அலுவலகம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அழைத்து சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அறிமுகம் செய்து வைத்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.