காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழா இன்று (மே 23) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு ஆலயத்தின் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை 5:30 மணியளவில், ரிஷப வாகனத்தில் பிரம்மோற்சவ கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொடிமரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம், இளநீர், விபூதி, பழரசம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/05/23/j1bcfcDSy7CnG01ORWEx.jpg)
இதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டவும் பிரம்மோற்சவ கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றதுடன், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் கோலாகலமாக நடைபெற்றது.
செய்தி - பாபு ராஜேந்திரன்