கீழையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் - சாந்தி ஆகியோரின் மகனான பொறியாளர் பிரபு முருகானந்தம், தனது தொடக்கக் கல்வி முதல் பொறியியல் பட்டம் வரை சிவகங்கை மாவட்டத்திலேயே பயின்றுள்ளார். பின்னர், ஒரு வருடம் சென்னையில் பணிபுரிந்த அவர், மேல்படிப்பிற்காக 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அங்கு இரண்டு ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு, இன்டெல் (நிறுவனத்தில் சுமார் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். வேலைக்கு அப்பால், கலை, இலக்கியம், சினிமா, தமிழ் எழுத்து ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரபு, கவிஞர் தேவதேவன், எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோரின் புத்தகங்களை படிப்பதில் விருப்பம் கொண்டிருந்தார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு எழுத்துப் பட்டறைக்குச் சென்றபோது, அங்கு மேற்கத்திய நடனத்தில் சிறந்து விளங்கிய கரீனா ரேல் என்பவரை பிரபு சந்தித்தார். உட்லாண்ட் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த பிரியன் ரேல் - கிறிஸ்டினா ராபின்சன் ஆகியோரின் மகளான கரீனா, அந்த நிகழ்வில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார். இலக்கியத்திலும் எழுத்திலும் ஆர்வம் கொண்ட பிரபு, கரீனாவின் நடனத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர், இருவரும் நல்ல நண்பர்களாயினர்.
பிரபுவைச் சந்திப்பதற்கு முன்பே, சென்னை வந்திருந்த கரீனாவிற்கு பரதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. நல்ல நண்பராகப் பழகி வந்த பிரபுவிடம், கரீனா தனது வீட்டில் இருந்த நடராஜர் சிலையைக் காண்பித்து, பரதம் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, கரீனாவைத் தமிழகத்திற்கு அழைத்து வந்த பிரபு, சிதம்பரத்திற்கு அழைத்துச் சென்று நடராஜர் பெருமாள் சிலையைக் காண்பித்தார். தொடர்ந்து மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பற்றி விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, தமிழக கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட கரீனாவுக்கு, பிரபு மீது காதல் ஏற்பட்டது. நண்பர்களாக இருந்த இருவரும் காதலர்களாக மாறினர். ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்த இவர்களின் காதலை இரு குடும்பத்தினரிடமும் தெரிவித்தனர். தமிழ் பண்பாட்டு முறையில் திருமணம் செய்ய மணப்பெண் வீட்டார் முதலில் சற்றுத் தயங்கினர். ஆனால், இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை பிரபு எடுத்துக் கூறியதும், அவர்களும் ஆர்வம் கொண்டு சம்மதித்தனர்.
இதன் விளைவாக, இன்று திருப்பத்தூர் அருகே கீழையப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பட்டுப் புடவை, பாரம்பரிய நகைகள் அணிந்து கரீனா இந்திய மணப்பெண்ணாக மேடையில் தோன்றியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இவர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.