திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சாவடி தெருவில் வசித்து வருபவர் கதிரவன். இவர் ஊத்துக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக உள்ளார். இவரது மகன் சூர்யகுமார். இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து மேல் படிப்பிற்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள லித்துவேனியா நாட்டிற்கு சென்றார்.
அங்கு படிப்பை முடித்த அவருக்கு, அந்த நாட்டிலே வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு, வேலைக்கு சேர்ந்த அதே இடத்தில் விலங்கு நல ஆர்வலரான அதே நாட்டைச் சேர்ந்த கமிலே டெக்னென் கைய்டே என்ற பெண்ணுடம் காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நாட்டிலே பெண் வீட்டார் வேண்டுதலின் பேரில், கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து செய்து கொண்டனர்.பின்னர் அந்த பெண் தமிழர் முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து காதலன் ஊரான ஊத்துக்கோட்டையில் உள்ள சூர்யகுமாரின் குல தெய்வ கோயிலான பெரியாண்டவர் கோயிலில் வேத மந்திரங்கள் ஓத அக்கினி முன்பு மஞ்சள் கயிற்றில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். லித்துவேனியா நாட்டு பெண்ணை தமிழர் ஒருவர் தமிழர்களின் முறைப்படி திருமணம் செய்து கொண்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“