க.சண்முகவடிவேல்
Thiruvarur: திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் கோயில் நாயன்மார்களால் பாடப்பட்ட சிறப்புக்குரியதாகவும், பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது சர்வ பரிகார தோஷங்களை நீக்கும் தலமாகவும் திகழ்கிறது. இந்தக் கோயிலில் திருவிழா மார்ச் மாதத்தில் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அப்போது நடத்தப்படும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றதாகும்.
இங்குள்ள ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக கருதப்படுகிறது. இந்த தேரோட்டம் டெல்டா மாவட்டங்களில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவாரூர் தியாகராஜர் சன்னதியின் பங்குனி திருவிழா கடந்த பிப்ரவரி 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
அஸ்தம் நட்சத்திரத்தில் குடியேறி ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் திருவிழா நடத்தப்படவேண்டும் என்பது ஆகமவிதி. அதன்படி அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் இனிதே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயில்ய நட்சத்திர தினமான இன்று ஆசியாவிலே மிக பெரிய தேரான ஆழித் தேரோட்டம் துவங்கியது.
இன்று காலை தேருக்கு உற்சவர் கொண்டுவரப்பட்ட பின் முதலில் விநாயகர் தேர் காலையில் புறப்பட்டு சென்றது. அதைத்தொடர்ந்து 8.50 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெரிய தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். கீழ ரத வீதியில் தொடங்கியுள்ள தேரோட்டம் இன்று பகல் முழுவதும் நான்கு ரத வீதிகளிலும் வலம்வந்து, மாலையில் நிலைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர் திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், மன்னார்குடி, கும்பகோணம்,மயிலாடுதுறை, நாகை, திருத்துறைப்பூண்டி வழித்தடங்களில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று மாலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவாரூா் ஆழித்தேருக்கு பல சிறப்புகள் உண்டு.... ஆசியாவிலேயே மிகப்பொிய தேர் எனும் பெருமை, திருவாரூா் தேருக்கு உண்டு.
திருவாரூா் தியாகராஜா் கோயிலில், ஆழித்தேர் எனப்படும் திருவாரூா் தேர் சுமார் 96 அடி உயரம் கொண்டது, 360 டன் எடை கொண்டது. நான்கு நிலைகள் கொண்டு 6 மீட்டா், 1.2 மீட்டா், 1.6 மீட்டா், 1.6 மீட்டா் என பிரமாண்டமாக இருக்கும் தேர், ஆடி அசைந்து வரும் அழகைப் பாா்த்துக்கொண்டே இருக்கலாம்.
அந்தக் காலத்தில் அதாவது அரசா்கள் ஆண்ட காலத்திலும் அடுத்தடுத்த காலகட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தா்களுடன் சேர்ந்து யானைகளும் தேர் இழுத்து வருவது வழக்கம். தேரோட்டம், நான்கு மாடவீதிகளிலும் சுற்றி மீண்டும் தேரை நிலைக்கு கொண்டு வருவதற்கு, எட்டுப்பத்து நாட்களுக்கு மேலாகுமாம். பிறகு அது தொழில்நுட்பக் காரணங்களால், படிப்படியாகக் குறைக்கப்பட்டன. அதேபோல், அப்போதெல்லாம் அத்தனை டன் கொண்ட தேரை, திருப்புவது என்பதும் சாமானியம் அல்ல என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்போது ஹைட்ராலிக் பிரேக் முதலான உதவியுடன் தேர் திருப்பப்படுகிறது. தேரின் சக்கரம் 2.59 மீட்டா் விட்டம் கொண்டவை என்றால் அதன் பிரமாண்டத்தை உணர்ந்துகொள்ளலாம்.
பண்டைய காலங்களில் இந்த பிரம்மாண்டமான தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப்பட்டனா் என கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது என்கிறாா்கள். ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி தேரை நகா்த்தியுள்ளனா். இப்போது, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடிக்க, யானைக்குப் பதிலாக 4 புல்டோசா்கள் கொண்டு தேர் இழுக்கப்படுகின்றன.
ஆரூா் எனப்படும் திருவாரூரில், தியாகராஜா் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும், தேரோட்டம் வரும்போது, ‘ஆரூரா... தியாகேசா’ எனும் கோஷங்களுடன் பக்தா்கள் மெய்சிலிர்த்து தாிசிப்பாா்கள். அப்படி தேர் வரும் இடங்களிலெல்லாம் ஆங்காங்கே பக்தா்களுக்கு நீா் மோர், பானகம், அன்னதானம், விசிறி முதலானவை வழங்கப்படுகிறது.
ஆழித் தேரானது, நான்கு நிலைகளையும், பூதப்பாா், சிறுஉறுதலம், பொியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டுள்ளது. இந்த தேரின் நான்காவது நிலையில்தான் உத்ஸவா் தியாகராஜ சுவாமி வீற்றிருக்கிறார். இந்த பீடம் மட்டுமே 31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது. மேலும் தேருக்கான தேர்ச்சீலைகளே சுமார் 3 ஆயிரம் மீட்டா் அளவுக்கு வாங்கப்பட்டு அலங்கரிக்கப்படும் என்கிறாா்கள் ஆலய நிர்வாகத்தினா். தேரில், பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பொிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
தேரை அலங்கரிக்கும்போது, 500 கிலோ எடையுடைய துணிகள், 50 டன் எடை கொண்ட கயிறுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. திருவாரூா் தேரின் முன்புறத்தில் 4 பொிய வடம் பிடிக்கும் கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடம் (கயிறு) 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாகவும் இருக்கின்றன. ஆழித்தேர் ஓடுவதை காண்பதை காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் ஆடி, ஆடி திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடும். ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்தத் தேரின் சக்கரங்களை இரும்பு பிளேட்டுகளின் மீது மசையை கொட்டி., இழுத்து திருப்புவதைப் பாா்க்கவே பிரமிப்பாக இருக்கும்.
இன்றைய தினம் (21-03-2024) அன்று திருவாரூரில் ‘ஆரூரா... தியாகேசா...’ கோஷங்களுக்கு மத்தியில்., லட்சக்கணக்கான பக்தா்களுக்கு நடுவே., ஆழித்தேரோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.