“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே’ என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும்.
சைவ சமய மரபில் பெரியகோவில் என்று அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். இக்கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது.
மக்கள் கடலில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால் மக்கள் இத்தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.
புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இந்த தேர் சிம்மாசனம், பத்மாசனம் என 5 வகை ஆசனங்களை கொண்டு 5 அடுக்குகளாக உள்ளது. 36 அடி உயரத்தில் முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள், நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை சுமார் 300 டன்னாக இருக்கிறது.

இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தேரின் மேல் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது. அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை சுமார் 350 டன் ஆகும். அசைந்து வரும் ஆழித்தேர் பார்ப்பவர் கண்களுக்கு பரவசம் தரும்.
தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரமாகும். சாதாரணமாக இந்த தேர் 36 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது.
ஆசியாவிலேயே பெரிய தேர், ஆழித்தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேர்கள் உள்ளது.
இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையால் ஆனவை.
இன்று காலை 5.30 மணிக்கு முருகர், விநாயகர் தேர்கள் இழுக்கப்பட்டது.
பின்னர் 7.30 மணிக்கு பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமியை கொண்ட ஆழித்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் திருவாரூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆழித்தேரினை ஆரூரா, தியாகேசா கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலையில் கிளம்பிய தேர் மாலை நிலைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“