இன்று திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமன பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 15-ம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
ஏறத்தாழ 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட ஆழித்தேர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் தியாகராஜ சுவாமி, அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில் விநாயகர், சுப்பிரமணியர், தேர் வடம் பிடிக்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்