திருவெறும்பூர் என பெயர் வர காரணமான எறும்பீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருச்சி மற்று சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டியிருந்ததால் நேற்று இரவே தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி யாகசாலை பூஜையில் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றார்.
திருவெறும்பூர் என பெயர் வர காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேக விழா கடந்த மாதம் 3-ம் தேதி பந்தக்கால் நடுதலுடன் துவங்கியது. இதற்காக கடந்த 4ம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாக சால பூஜை தொடங்கியது. அதன் பிறகு ஐந்து மற்றும் ஆறாம் தேதிகளில் காலை மாலை என இரு நேரங்களிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 7ம் தேதியான இன்று காலை ஐந்து மணிக்கு நிறம் கொள் கண்டத்து நின்மலனுக்கு ஆறாம் காலம் பூஜை ஆரம்பமானது. மங்கல இசை தேவார பாராயணம் விக்னேஸ்வர பூஜை புண்ணியா ஹவாசனம் யாக பூஜை ஹோமம் வேதப்பாராயணம் மூல மந்த் ஹோமம் பிரதியாக ஊதி நடைபெற்றது. அடுத்து காலை 7:10 மணிக்கு மகாபூர்ணகுதி உபசார பூஜை யாத்திரா தானம் நடைபெற்றது. அதன் பிறகு 9.15மணிக்கு ஸ்ரீ சுவாமி அம்பாள் சிறிய ராஜகோபுரம் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ எறும்பீஸ்வரர் ஸ்ரீ நறுங்குழல் நாயகி ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என்ற கோஷங்கள் விண்ணதிர வழிபாடு நடத்தினர்.
பின்னர் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. மாலை நாலு மணிக்கு மகாபிஷேகம் தீபாரதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு உமையவள் தம் பெருமானுக்கு திருக்கல்யாணமும் இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழா 27 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படுவதால் திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/db3c2b46-5f6.jpg)
பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோயில் முன்பு திருவெறும்பூர் புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. திருவெறும்பூர் ஏ.எஸ்.பி பனாபத் அரவிந்த் மற்றும் இரண்டு ஏ.டி.எஸ்.பி-கள் தலைமையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்தில் 16 இடங்களில் போலீசார் சிறப்பு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் போலீஸ் படையுடன் தொடர்ந்து உள்பகுதியில் வழிப்பறி திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்.
முன்னதாக, தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று இரவு எறும்பீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அமைச்சருக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம் பழனியப்பன் தலைமையில் அறங்காவலர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன்பிறகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி யாகசால பூஜை நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். பின்னர், மலை மீது உள்ள நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரை தரிசனம் செய்தார்.
இந்த கும்பாபிஷேக விழாவில் அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் திருச்சி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், வார்டு கவுன்சிலர் சிவகுமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் அலுவலர்களும் பல்வேறு கட்சி பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக யாகசால பூஜை ஏற்பாடுகளை தொழிலதிபர் ரவீந்திரன் செய்திருந்தார். இந்த விழாவிற்கான ஏற்பட்டை கோவில் செயல் அலுவலர் வித்யா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.