/indian-express-tamil/media/media_files/2025/05/10/X2E8pbeewTZ9HolCsIlQ.jpg)
உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது நீண்ட காலமாக மூட்டு வலி மற்றும் வீக்கத்துடன் தொடர்புடையது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சில வீட்டு வைத்தியங்கள் இந்த நிலையை நிர்வகிக்க உதவினாலும், குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு இது நம் உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்வது முக்கியம்.
ஹைதராபாத்தில் உள்ள கிளேனீகிள்ஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் மருத்துவரான ஹரிச்சரன் indianexpress.com-இடம் கூறுகையில், யூரிக் அமிலம் என்பது பியூரின் வளர்சிதை மாற்றத்தின் துணை விளைபொருள் என்றும், பியூரின்கள் சிவப்பு இறைச்சி மற்றும் சில வகையான கடல் உணவுகளில் காணப்படுகின்றன என்றும் கூறினார். "பியூரின்கள் உடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. அதிக யூரிக் அமிலம், வாதம், சிறுநீரக கற்கள் மற்றும் மூட்டுவலி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளதா என்பதை எப்படி அறிவது?
ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையின் மருத்துவர் ராகுல் சிராக் கூறுகையில், இரத்த பரிசோதனை மூலம் யூரிக் அமிலம் பரிசோதிக்கப்படுகிறது என தெரிவித்தார். "பெரும்பாலான ஆண்களுக்கு, இயல்பான அளவு 3.4 முதல் 7.0 mg/dL வரை இருக்கும், பெண்களுக்கு இது 2.4 முதல் 6.0 mg/dL வரை இருக்கும். உங்கள் அளவு இதை விட அதிகமாக இருந்தால், அது அதிக யூரிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது" என அவர் விளக்கினார்.
இருப்பினும், ஒரு முறை அதிக அளவு இருப்பது பெரிய பிரச்சனை என்று அர்த்தமல்ல என்று அவர் கூறினார். மருத்துவர்கள் பொதுவாக அந்த அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கிறதா மற்றும் மூட்டு வலி அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கவனித்து தீர்மானிப்பார்கள்.
உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும்போது என்ன நடக்கும்?
நவி மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் மருத்துவர் சைதன்யா குல்கர்னி கூறுகையில், "அதிகப்படியான யூரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும். ஏனெனில், சிறுநீர் அதிக அளவு படிகமாக்கப்பட்ட யூரிக் அமிலத்துடன் அடர்த்தியாகும்போது அவை உருவாகின்றன. தீவிர நிலையில், தொடர்ச்சியான ஹைப்பர்யூரிசீமியா சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தலாம் அல்லது இருதய கோளாறுகளின் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்" என்று தெரிவித்தார்.
பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளில் மூட்டி வலி, வீக்கம், சிவத்தல் மற்றும் அந்த இடத்தில் சூடான உணர்வு ஆகியவை அடங்கும். "வலி மிகவும் தீவிரமாக இருக்கலாம். சில சமயங்களில் நீங்கள் அசைக்காதபோதும் மூட்டு விறைப்பாக இருக்கலாம்" என்று அவர் கூறினார்.
இது தொடர்ந்து நடந்தால், அது அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறியாக இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில், இரத்த பரிசோதனை செய்து மருத்துவரை அணுகுவது நல்லது. ஆரம்பகால சிகிச்சை நீண்ட கால பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.
கோடை காலத்தில் ஏன் யூரிக் அமில அளவு அதிகரிக்க முனைகிறது?
போர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் விஷால் indianexpress.com இடம் கூறுகையில், "கோடை காலத்திற்கு, யூரிக் அமில அளவு உயர்வதற்கும் நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், ஏற்கனவே ஆபத்தில் இருப்பவர்களுக்கு இது தூண்டுதலாக இருக்கலாம். இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன" என்று விளக்கினார்.
உற்பத்தி அதிகரிப்பு: பியூரின் நிறைந்த உணவுகளான சிவப்பு இறைச்சி, உறுப்பு இறைச்சிகள் (கல்லீரல், சிறுநீரகம்) மற்றும் சில கடல் உணவுகளை மிக அதிகமாக எடுத்துக் கொள்வது யூரிக் அமிலத்தை அதிகரிக்கும். அதிகப்படியான மது அருந்துதல், சர்க்கரை பானங்கள் (ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்) மற்றும் சில மருந்துகளும் இதற்கு பங்களிக்கலாம்.
சிறுநீரக செயல்பாட்டில் மாற்றம்: உங்கள் சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை திறமையாக அகற்ற சிரமப்படும் போது, அதன் அளவு அதிகரிக்கலாம். இது மரபியல், உடல் பருமன் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அல்லது டையூரிடிக்ஸ் போன்ற சில மருந்துகள் காரணமாக இருக்கலாம்.
யூரிக் அமில அளவை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது?
உணவு: சர்க்கரை பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை முன்னுரிமைப்படுத்துங்கள்.
நீரேற்றத்துடன் இருங்கள்: சிறுநீர் கழிப்பதன் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்கவும். குறிப்பாக கோடை காலத்தில் நீரிழப்பைத் தடுக்க இது முக்கியம்.
எடை மேலாண்மை: ஆரோக்கியமான எடையை பராமரிப்பது யூரிக் அமில அளவுகளுக்கு கணிசமாக பயனளிக்கும். ஏனெனில், கொழுப்பு செல்கள் தசை செல்களை விட அதிகமாக உற்பத்தி செய்கின்றன.
வழக்கமான உடற்பயிற்சி ஆரோக்கியமான எடையை பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும்.
நார்ச்சத்து உட்கொள்ளல்: தினமும் குறைந்தது 5-10 கிராம் நார்ச்சத்து உட்கொள்வது இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தவும், யூரிக் அமிலத்தை நிர்வகிக்கவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.