உடல் ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்புக்கு உதவும் முறையாக 24 மணி நேர நீர் விரதம் (24-hour water fasting) பிரபலமடைந்து வருகிறது. இந்த விரதத்தின்போது, உணவை முழுமையாகத் தவிர்த்து, தண்ணீர் மட்டுமே குடிக்கப்படுகிறது. இது உடல் சுத்திகரிப்பு, செல் புதுப்பித்தல் போன்ற பல நன்மைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதை மேற்கொள்வதற்கு முன் அதன் நன்மைகள், வழிமுறைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
24 மணி நேர நீர் விரதம் என்றால் என்ன?
நீர் விரதம் என்பது குறிப்பிட்ட காலத்திற்கு உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் மட்டுமே குடிப்பது. இது பொதுவாக 24 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். புதிதாக நீர் விரதத்தை மேற்கொள்பவர்கள் 24 மணி நேரத்துடன் தொடங்கலாம். மாதத்திற்கு ஒரு முறை (அ) 21 நாட்களுக்கு ஒரு முறை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பிரபலமான எழுத்தாளரும், சுகாதாரப் பயிற்சியாளருமான பென் அஸாதி, தனது குறிப்பிடத்தக்க உடல் எடை இழப்புப் பயணத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருகிறார். அவர் 80 பவுண்டுகள் கொழுப்பை இழந்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், கொழுப்பைக் குறைப்பதற்கான துணிச்சலான உத்தியை அவர் அறிமுகப்படுத்தினார்: அது வாராந்திர 24 மணி நேர நீர் விரதம். அஸாதியின் கூற்றுப்படி, இந்த விரத முறை கொழுப்பைக் எரிப்பது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து, இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துகிறது என்கிறார். முழு நாள் விரதம் இருப்பது உடல் எடை இழப்பதைத் தாண்டி பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று அஸாதி வலியுறுத்துகிறார்.
"வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்யுங்கள். இது உங்கள் குடலை மீட்டெடுக்கும், கொழுப்பை எரிக்கும், மற்றும் நோய்களைத் தடுக்கும். இது 24 மணி நேர நீர் விரதம் என்றழைக்கப்படுகிறது. குடல் ஸ்டெம் செல்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன? நீங்கள் வாயு, வயிறு உப்பசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு (அ) லீக்கிகட் (Leaky Gut) போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வெறும் 24 மணி நேர நீர் விரதத்தின் மூலம் உங்கள் குடலில் உள்ள அந்த இறுக்கமான இணைப்புகளை முழுமையாக மீட்டெடுக்க முடியும்."
அஸாதி, விரதத்தை மேம்பட்ட இன்சுலின் உணர்திறனுடன் இணைக்கிறார். இது கொழுப்பைக் குறைப்பதில், குறிப்பாக வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் உள்ள பிடிவாதமான கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய காரணியாகும். "அந்த விரதத்தில் ஒவ்வொரு மணி நேரமும், இன்சுலினை குறைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இது இடைப்பட்ட விரதம் (intermittent fasting) வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் என்பதை வலுப்படுத்துகிறது.
நீர் விரதத்திற்குப் பின்னால் உள்ள அறிவியல்:
24 மணி நேர நீர் விரதம் கொழுப்பைக் குறைப்பதற்கான ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான முறையா? ஃபரிதாபாத்தில் உள்ள யதார்த்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் உள் மருத்துவம் மற்றும் ருமாட்டாலஜி இயக்குநர் டாக்டர். ஜெயந்தா தாகுரியா இந்த விஷயத்தில் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார். விரதம் நன்மை பயக்கும் என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
"வாரத்திற்கு ஒருமுறை 24 மணி நேர நீர் விரதம், கலோரி குறைபாட்டை உருவாக்கி, வளர்சிதை மாற்ற நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் கொழுப்பைக் குறைக்க உதவும். சில ஆய்வுகள் இடைப்பட்ட விரதம் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்தலாம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் மற்றும் ஆட்டோஃபேஜி செயல்முறைக்கு ஆதரவளிக்கலாம் என்று கூறுகின்றன."
டாக்டர். தாகுரியா சாத்தியமான பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டுகிறார். நீண்ட நேரம் விரதம் இருப்பது சரியாக செய்யப்படாவிட்டால் சோர்வு, தலைசுற்றல், எரிச்சல் (அ) தசை இழப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கிறார். மிக முக்கியமாக, இது அனைவருக்கும் பொருந்தாது. வளர்சிதை மாற்றக் கோளாறுகள், குறைந்த ரத்த அழுத்தம், அல்லது விரதத்திற்குப் பிறகு அதிகமாக உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் இதை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றார்.
24 மணி நேர விரதம் உங்களுக்குச் சரியானதா?
விரதத்தின் மூலம் "பிடிவாதமான கொழுப்பைக் கரைக்கும்" யோசனை கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், நிலையான எடை இழப்பு சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் கவனத்துடன் உண்ணும் பழக்கத்தை நம்பியே உள்ளது; தீவிரமான உணவுமுறை தலையீடுகளை அல்ல, என்று டாக்டர். தாகுரியா கூறுகிறார். தனிப்பட்ட உடல்நல நிலைமைகள் மற்றும் இலக்குகளுடன் இது ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்த, நீண்ட கால விரதத்தை முயற்சிக்கும் முன் சுகாதார நிபுணரை அணுகுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அஸாதியின் முறை அவருக்கும் அவரது பல பின்பற்றுபவர்களுக்கும் பலனளித்திருந்தாலும், எடை இழப்பு உத்திகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். விரதத்திற்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொண்டு, அதை உங்கள் உடலின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதே தகவலறிந்த சுகாதார முடிவுகளை எடுப்பதற்கான திறவுகோலாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.