/indian-express-tamil/media/media_files/2025/06/03/NWDcfAf3XnHFzfYZIjpo.jpg)
பழுப்பான வெள்ளைச் சட்டை பளிச்சென மாறும்… லாண்டரி கடை டெக்னிக் இதுதான்!
வெள்ளை ஆடைகளை அணிவது தனி அழகுதான்! ஆனால், அவற்றை எப்போதும் புத்தம் புதிதாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பது என்பது நம்மில் பலருக்கும் சவாலான விஷயமே. கடைகளில் லாண்டரிக்கு கொடுத்து வாஷ் செய்யும்போது கிடைக்கும் அந்த பளிச் வெண்மை, நாம் வீட்டில் துவைக்கும்போது கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு. இதற்குக் காரணம், லாண்டரி கடைகளில் பயன்படுத்தப்படும் சில பிரத்யேக முறைகள்தான். அப்படிப்பட்ட ரகசியத்தைதான் ரோஸி’ஸ் விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி நீங்களும் உங்கள் வெள்ளை ஆடைகளை, குறிப்பாக சட்டைகளை, லாண்டரி கடைகளில் கிடைப்பது போலவே பளபளப்பாக மாற்ற முடியும். எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.
லாண்டரியின் வெண்மை ரகசியம்: வெள்ளை ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கி, புத்துணர்ச்சியுடன் ஜொலிக்க வைக்க 2 முக்கிய பொருட்கள் தேவை. இதனை சரியான விகிதத்தில், சரியான முறையில் பயன்படுத்தும்போது, வெள்ளை ஆடைகளும் புதுப்பொலிவு பெறும்.
- வாஷிங் சோடா (Washing Soda): துணிகளில் உள்ள அழுக்குகளை ஆழமாக நீக்க உதவுகிறது.
- பிளீச்சிங் பவுடர் (Bleaching Powder): இதுதான் கறைகளை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
கறை நீக்கும் செயல்முறை: முதலில், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சலவைப் பவுடரைக் கொண்டு வெள்ளை சட்டையை ஒரு முறை அலசி, அழுக்கை நீக்கிக் கொள்ளுங்கள். ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து, அதில் 10 துணிகளுக்கு சுமார் 100 கிராம் பிளீச்சிங் பவுடர் மற்றும் 200 கிராம் வாஷிங் சோடா என்ற அளவில் சேர்க்க வேண்டும். பிளீச்சிங் பவுடரை நேரடியாக சேர்க்காமல், ஒரு மெல்லிய துணியில் (ஷால்) வைத்து தண்ணீரில் கரைத்து வடிகட்டுவது நல்லது. ஏனெனில், அதில் உள்ள சிறு துகள்கள் துணிகளில் படியக்கூடும். வாஷிங் சோடாவை நேரடியாகச் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையில், கறை படிந்த வெள்ளைச் சட்டைகளை நன்கு மூழ்கும்படி ஒருநாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். (உதாரணமாக இன்று மாலை ஊறவைத்தால் மறுநாள் காலை எடுக்கலாம்). ஊறிய பிறகு சட்டைகளை எடுத்துப் பார்த்தால், கறை அனைத்தும் மாயமாக மறைந்திருப்பதை நீங்கள் காணலாம். காலர் மற்றும் கை முட்டிகளில் இருந்த கடினமான அழுக்குகளும் நீங்கிவிடும். பிறகு, நல்ல தண்ணீரில் ஒன்று அல்லது 2 முறை நன்கு அலசிப் பிழிந்து எடுக்க வேண்டும்.
வெள்ளை ஆடைகளுக்கு கஞ்சி போட்டு அயர்ன் செய்தால் அதன் தோற்றமே தனிதான். கஞ்சி போட்ட சட்டையை காலர், கை மடிப்புகள், பட்டன் பகுதி என ஒவ்வொரு பகுதியையும் நேர்த்தியாக அயர்ன் செய்ய வேண்டும். சுருக்கங்கள் இல்லாமல் மடிப்பது அவசியம்.
முக்கிய குறிப்பு: பிளீச்சிங் பவுடர் முறையை வெள்ளை நிறத் துணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வண்ணத் துணிகளில் பயன்படுத்தினால், துணியின் நிறம் வெளுத்துப் போய்விடும். பெயிண்ட் கறை போன்ற சில வகை கறைகளை இந்த முறையில் நீக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும். பிளீச்சிங் பவுடரைக் கையாளும்போது, அது கண்ணிலோ, மூக்கிலோ படாமல் கவனமாக இருப்பது அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.