நம் உடலில் வைட்டமின் D செயல்பட மெக்னீசியம் என்ற தாதுப்பொருள் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கல்லீரலிலும் சிறுநீரகத்திலும் வைட்டமின் D-ஐ செயல்படுத்துவதில் மெக்னீசியத்தின் பங்கு அளப்பரியது.
ஆங்கிலத்தில் படிக்க:
மும்பை கிளீனிகிள்ஸ் மருத்துவமனையின் மூத்த உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறுகையில், "கல்லீரலிலும் சிறுநீரகத்திலும் வைட்டமின் D-ஐ செயல்படுத்துவதில் மெக்னீசியம் மிகவும் பயனுள்ளதாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது" என்றார். ஆனால், இந்த செயல்முறை உடலில் எவ்வாறு செயல்படுகிறது?
நவி மும்பை மெடிகோவர் மருத்துவமனையின் உணவுமுறை நிபுணர் டாக்டர் ராஜேஷ்வரி பாண்டா, "இந்த செயல்முறையை சீராகவும் திறமையாகவும் முடிக்க கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள நொதிகளுக்கு மெக்னீசியம் உதவுகிறது. போதுமான மெக்னீசியம் இல்லாமல் வைட்டமின் D சரியாக செயல்படுத்தப்படாமல் போகலாம். இது கால்சியம் உறிஞ்சுதலைக் குறைத்து, எலும்பு ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும்” என்கிறார்.
குறிப்பாக, வைட்டமின் D உடலில் செயல்பட இரண்டு ஹைட்ராக்சிலேஷன் நிலைகளுக்கு உட்படுகிறது. "முதலில் கல்லீரலில் கால்சிட்ரியோல் (1,25-டைஹைட்ராக்ஸிவைட்டமின் D) உருவாகிறது, இதில் வைட்டமின் D 25-ஹைட்ராக்ஸிவைட்டமின் D (கால்சிடியோல்) ஆக மாற்றப்படுகிறது. மற்றொன்று சிறுநீரகத்தில் நடக்கிறது, அங்கு அது 1,25-டைஹைட்ராக்ஸி வைட்டமின் D ஆக மாற்றப்படுகிறது. இந்த நிலைகளுக்கு மெக்னீசியம் சார்ந்த என்சைம்கள் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். போதுமான அளவு மெக்னீசியம் இல்லாமல், இந்த நொதிகள் தங்களின் செயல்பாடுகளைத் தேவையானபடி செய்ய முடியாது” என்று டாக்டர் அகர்வால் விளக்கினார்.
பெரும்பாலான மக்கள் தங்களின் தினசரி சமச்சீர் உணவில் இருந்து போதுமான மெக்னீசியத்தைப் பெறுகிறார்கள். இதில் ஏராளமான பச்சை காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் முழு தானியங்களில் இருந்து பெறுகிறார்கள்.
சூரிய ஒளியில் இருந்தோ, உணவில் இருந்தோ அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலமாகவோ கிடைக்கும் வைட்டமின் D கல்லீரலுக்குச் சென்று சேமிப்பு வடிவமாக மாற்றப்படுகிறது. பின்னர், சிறுநீரகம் அதை உங்கள் உடல் பயன்படுத்தக்கூடிய செயலில் உள்ள வடிவமாக மாற்றுகிறது என்று டாக்டர் பாண்டா கூறினார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/27/zCuDAqOhuDlXVRWkoK7Z.jpg)
மேலும், பாராதைராய்டு ஹார்மோன் (PTH) அளவை மெக்னீசியம் ஒழுங்குபடுத்துகிறது, இது வைட்டமின் D வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் என்று டாக்டர் அகர்வால் கூறினார். இருப்பினும், ஆரோக்கியமான நபர்களில் இது அரிதானது என்று டாக்டர் பாண்டா வலியுறுத்தினார்.
மெக்னீசியம் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், வைட்டமின் D-ஐ செயல்படுத்துவதில் இது ஒரு காரணி மட்டுமே. கால்சியம் மற்றும் வைட்டமின் K போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடல் வைட்டமின் D-ஐப் பயன்படுத்தும் விதத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்களுக்கு வைட்டமின் D அளவு குறைவாக இருந்தால், மருத்துவரை கலந்தாலோசித்து, மெக்னீசியம் அளவை சரிபார்த்து இணை உணவுகளை எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும் என்று டாக்டர் பாண்டா கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.