ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணம் கொண்ட தூதுவளை ரசம் செய்து குறித்து இங்கு பார்ப்போம். குறிப்பாக இந்த பருவமழை காலத்தில் சளி, இருமல் பிரச்சனை அதிகம் வரும் நிலையில் இந்த தூதுவளை ரசம் இப்பிரச்சனைகளை குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை - 1கப்
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 6
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
தக்காளி - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் தூதுவளை கீரை வாங்கி அல்லது பறித்து வந்து நன்றான சுத்தம் செய்யவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி தூதுவளை கீரையை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கும்போது புளி கரைசலையும், மிக்ஸியில் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.
பின் தூதுவளையை மிக்ஸியில் அரைத்து சேருங்கள். கடைசியாக உப்பு சேர்க்கவும். இதை இப்போது நன்றாக கொதிக்க விடவும். இப்போது தாளிக்க வேண்டும், அதற்கு அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள் சேர்த்து பின் அதை ரசத்தில் சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும். அவ்வளவு தான் ஆரோக்கியமான தூதுவளை ரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“