நீங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிப்பவராக இருந்தால், உங்கள் வீட்டு கிச்சனில் பூச்சிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், பல நேரங்களில் ஒரு துடைப்பம் வைத்து இவற்றை அகற்றுவது போதுமானதாக இருக்காது. குறிப்பாக, நூற்றாண்டு காலமாக இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு உங்களுக்கு சில யுக்திகள் தேவைப்படும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 3 reasons cockroach infestation spikes in summer and what you can do to get rid of them
கோடை காலத்தில் கரப்பான் பூச்சிகளின் தாக்கம் அதிகரிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்திய பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் ஷர்மா, பருவநிலை மாறும்போது பூச்சிகள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்வதாகப் பகிர்ந்துகொண்டார். "உதாரணமாக, மழைக்காலத்தில் எலிகள் அதிகமாகத் தெரியும். இது போன்ற உயிரினங்களின் வாழ்விடத்தைப் பார்த்து என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கரப்பான் பூச்சிகள் சூடாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும் சாக்கடைக் குழாய்களில் வாழ்கின்றன. அதிக நீர் உபயோகம் உள்ள கோடை காலத்தில், அவை மற்ற சூடான மற்றும் ஈரப்பதமான இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் கரப்பான் பூச்சிகளை இத்தகைய காலத்தில் அதிகமாக பார்க்க முடியும்".
கரப்பான் பூச்சிகளுக்கான உணவு கிடைத்தல் மற்றும் அவற்றின் வளர்சிதை மாற்றங்கள் காரணத்தால், கோடை காலத்தில் அவை வேகமாக இயங்கும். அவற்றின் இனப்பெருக்க சுழற்சிகளும் குறுகியது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்?
கரப்பான் பூச்சிகள் இருண்ட, ஈரமான மற்றும் சூடாக இருக்கும் இடங்களைக் கண்டறிந்து, உணவை எளிதில் அணுகும் என்று ஷர்மா தெரிவித்துள்ளார். "சிலிண்டரின் அடிப்பகுதி, வாஷ் பேசின், ஃப்ரிட்ஜின் பின்பகுதி போன்ற இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கரப்பான் பூச்சிகள் தங்கள் எதிர்ப்பு ஆற்றலின் மூலம், மனிதகுலத்தை விட அதிகமாக பிழைத்திருக்கின்றன. அவை உருவாவதற்கான சூழலை குறைத்து, வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எனவே, கரப்பான் பூச்சிகள் வரும் பாதையை அறிந்து அவற்றை அடைக்க வேண்டும். நம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில பூச்சி மருந்துகளை பயன்படுத்தலாம்" என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கரப்பான் பூச்சிகளை விரட்டும் முறை குறித்து சமையற்கலைஞர் அனன்யா பானர்ஜி சில குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். அதன்படி, கிச்சனில் கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் பிரிஞ்சி இலைகளை வைக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதேபோல், தண்ணீரில் சில துளிகள் வேப்பெண்ணெய்யை கலந்து கிச்சனில் ஸ்ப்ரே செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.