சிலருக்கு சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு கூடுவதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் இருக்கும். இதனால் உருவாகும் பாதிப்புகள் அதிகம். அதன்படி, இதற்கான காரணம் மற்றும் இவற்றை கட்டுப்படுத்தும் முறை குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்துவதை காணலாம்.
சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை குறைப்பதற்கான ஹார்மோன் தான் இன்சுலின். சர்க்கரையை குறைப்பதற்கு இன்சுலின் இரண்டு விதமாக சுரக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவது, சாப்பிட்டவுடன் முதல் 10 நிமிடங்களில் சுரக்க வேண்டிய இன்சுலின் அளவு குறைவாக இருப்பதால் தான் என கூறப்படுகிறது. இதனால் தான் சர்க்கரை அளவும் கூடுதலாக காண்பிக்கிறது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால் இருதயத்தில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, க்ளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருக்கும் உணவுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், சிறுதானியத்தை முழுதாக வேக வைத்து சாப்பிடுவதை விட, உடைத்த கோதுமை குருனையில் செய்யப்பட்ட உப்மா செய்து சாப்பிடலாம் எனக் கூறப்படுகிறது. இது சப்பாத்தி மற்றும் கோதுமை தோசையை விட சிறப்பான உணவு எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், அடை தோசை சாப்பிடுவதும் சர்க்கரை அளவு அதிகமாவதை தடுக்கிறது என பரிந்துரைக்கின்றனர்.
மேலும், மருந்து சாப்பிடுவதை சீரான இடைவெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரால் சாப்பிடுவதற்கு முன்னர் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்பட்ட மருந்தை, நிச்சயம் 30 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட வேண்டும். சில மருந்துகள் நம் உடலில் வேலை செய்வதற்கு 30 நிமிடங்கள் எடுக்கும். அவ்வாறு சரியான நேரத்தில் சாப்பிட்டால் தான், சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
இருப்பினும், சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவும் கூடுகிறது என்றால் நிச்சயம் மருத்துவரை சந்தித்து உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“