வெற்றிலையில் பல விதமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சிறப்பான விருந்துக்கு பின்னர் செரினாமத்திற்கு வெற்றிலை சாப்பிடுவது தமிழ் மரபு என்றும் கூறப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த வெற்றிலையை வீட்டில் எப்படி வளர்ப்பது என பார்க்கலாம்.
வெற்றிலை வளர்ப்புக்கு அதனை எவ்வாறு கொடியில் இருந்து வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்பது அவசியம். கொடியில் இருந்து ஃப்ரெஷ்ஷான பாகங்களை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கொடியின் நுனிப்பகுதி மற்றும் நடுப்பகுதியில் இருந்து வெட்டி எடுக்க வேண்டும். குறிப்பாக, வெட்டி எடுக்கும் இடத்தில் கனுப்பகுதி இருக்க வேண்டும். இதில் இருந்து தான் வேர் பிடிக்கத் தொடங்கும்.
இதனை, ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். வெட்டி எடுத்த பகுதி முற்றிலும் மூழ்காமல், கனுப்பகுதி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருந்தால் போதுமானது. இந்த நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். இதில் இருந்து 4 அல்லது 5 நாள்களில் வேர் விடத் தொடங்கும். 10 நாள்களில் வேர் நன்றாக தெரியும். 25 நாள்களுக்குள் வேர் நன்றாக வளர்ந்து இருக்கும்.
பின்னர், நீரில் வளர்த்த கொடியை தொட்டியில் நட்டு வைக்கலாம். செம்மண் 60 சதவீதம், மணல் 20 சதவீதம், உரம் 20 சதவீதம் என்ற அளவில் நிரப்பப்பட்ட தொட்டியில் வளர்த்தால் வெற்றிலையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மணல் ஈரப்பதமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்றலாம். ஆனால், தொட்டியில் தண்ணீர் தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கொடி படர்வதற்கு ஏதுவாக நூல் கட்டி ஏற்றிவிட வேண்டும். மேலும், சூரிய ஒளி அதிகமாக படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் வெற்றிலை கொடி செழிப்பாக படரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“