உங்கள் வீட்டில் இருக்கும் கறிவேப்பிலை செடி சரியாக வளரவில்லை என்ற கவலை இருக்கிறதா? அப்போ இந்த பதிவில் இருக்கும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. இதன் மூலம் வீட்டில் உள்ள கறிவேப்பிலை செடியை வேகமாகவும், பெரிதாகவும் வளர வைக்க முடியும்.
மாடித்தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது கறிவேப்பிலை. ஏனென்றால், நாம் தினசரி சமையலுக்கு பயன்படுத்துவதில் கறிவேப்பிலையின் பங்கு அதிகம் இருக்கும். இவற்றை நம் வீட்டிலேயே வளர்த்தல் நிச்சயம் பயனளிக்கும்.
வெளியே வாங்கப்படும் கறிவேப்பிலைகளில் அதிகளவிலான இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை உட்கொண்டால் நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அவ்வாறு வெளியே கடைகளில் இருந்து வாங்கி வரப்படும் கறிவேப்பிலைகளை மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
சமையல் மட்டுமின்றி ஹேர் கேர் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிலும் கறிவேப்பிலை பெரும் பங்கு வகிக்கிறது. இத்தகையை கறிவேப்பிலையை நம் வீட்டில் வளர்த்தால் நமது வேலையும் எளிமையாகும். அதன்படி கறிவேப்பிலை செடியை வளர்க்கும் டிப்ஸ் குறித்து தற்போது காண்போம்.
பனி காலங்களில் கறிவேப்பிலையை இலை புள்ளி நோய்கள் தாக்கும். மேலும், புழுக்களும் கறிவேப்பிலை வளர்ச்சியை அதிகமாக பாதிக்கும். எனவே, வேப்பெண்ணெய்யை கறிவேப்பிலை மீது ஸ்ப்ரே செய்தால், இது போன்ற தாக்குதல்களில் இருந்து தடுக்கலாம். கறிவேப்பிலை பெரிதாக வளர்வதற்கு, வீட்டில் உள்ள புளித்த மோர் ஒரு கிளாஸ் எடுத்து, அத்துடன் 10 கிளாஸ் தண்ணீர் சேர்த்து தெளித்தால், கறிவேப்பிலை செடிகள் பெரிதாக வளரும்.
மேலும், நம் கிட்சனில் உள்ள புளித்த மாவு மற்றும் பெருங்காயம் கொண்டு கறிவேப்பிலைக்கு உரம் தயாரிப்பது மிக எளிதானது. ஒரு கப் உப்பு கலக்காத புளித்த மாவுடன், அரை ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து ஒரு வாளி தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை இரண்டு நாள்கள் ஊற வைத்து விட்டு, கறிவேப்பிலை செடிக்கு ஊற்ற வேண்டும். இதனை 15 நாள்களுக்கு ஒரு முறை செடிக்கு ஊற்றினால் கறிவேப்பிலையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“