ரோஜா, மல்லி போன்ற மலர்கள் பெரும்பாலானோருக்கு பிடிக்கும். அதே அளவு செம்பருத்தி மலர்களையும் ஏராளமானோருக்கு பிடிக்கும். பலரது மாடித் தோட்டத்தில் தவறாமல் இடம்பிடிப்பது செம்பருத்தி மலர்களாக இருக்கும். அதனடிப்படையில், செம்பருத்தி மலர்களை நன்றாக பூத்துக் குலுங்க வைக்கும் 5 டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.
முதலில் உரம் வைப்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கும். உண்மையில் செம்பருத்தி செடிக்கு பெரிதாக உரம் தேவைப்படாது. 40-45 நாள்களுக்கு ஒரு முறை காய்கறி கழிவுகளை உரமாக வைக்கலாம். இதன் மூலம் காய்கறியில் உள்ள சத்துகள் செம்பருத்தி செடிக்கு நேரடியாக கிடைக்கும்.
அடுத்ததாக, செடியில் உள்ள காய்ந்த இலைகள் மற்றும் பழுத்த இலைகளை பறித்து விட வேண்டும். இதன் மூலம் சத்துகள் அனைத்தும் புதிய இலைகள், பூக்கள் மற்றும் மொட்டுகளுக்கு சென்றடையும். இந்த முறையையும் எளிமையாக பின்பற்றலாம்.
செம்பருத்தியில் அதிகமாக மாவு பூச்சிகள் வரும். இதனை தடுக்க சில வழிகள் உண்டு. மாலை 5 மணிக்கு மேல் செம்பருத்தி செடியின் மீது சாதாரண தண்ணீர் தெளிக்க வேண்டும். இதன் பின்னர், செடியின் மீது வெப்பெண்ணெய் ஸ்ப்ரே செய்து விடலாம். இவ்வாறு செய்தால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.
செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது மொட்டுகள் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மொட்டுகள் மீது தண்ணீர் அதிகமாக பட்டால் அவை அழுகிவிடும்.
இதையடுத்து, 30 நாள்களுக்கு ஒரு முறை திரவ நிலையில் உள்ள உரங்களை கொடுக்க வேண்டும். உதாரணமாக, கடலை புண்ணாக்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“