சமையல் சோடா உடன் சீயக்காய் சேருங்க… பாத்ரூம் பளிச்சென மாறும்!
வீட்டில் இருக்கும் கழிவறையை சுத்தமாக பராமரிப்பதற்கான சில பயனுள்ள டிப்ஸை இந்த செய்திக் குறிப்பில் காணலாம். இதன் மூலம் கழிவறையை சுகாதாரமாக வைத்திருக்க முடியும்.
வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கழிவறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இவை ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியது. மற்ற அறைகள் பார்ப்பதற்கு சுத்தமாக இருக்க வேண்டும் என நாம் மெனக்கெடுவதை விட, கழிவறையை சுகாதாரமாக பேணுவது இன்றியமையாதது.
Advertisment
அந்த வகையில், கழிவறையை சுத்தமாக வைத்திருப்பதற்கான டிப்ஸை பார்க்கலாம். பெரும்பாலான கழிவறைகள் உப்புக் கறை படிந்து காணப்படும். இவற்றை வீட்டில் இருக்கக் கூடிய இரண்டு பொருட்களைக் கொண்டு சுத்தமாக மாற்ற முடியும். இதற்காக ஒரு சிறிய பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3 பாக்கெட் சீயக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். கடைகளில் கிடைக்கும் 2 ரூபாய் சீவக்காய் பாக்கெட்டுகளை இதில் பயன்படுத்தலாம்.
இந்த இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். பின்னர், இதில் இருந்து 2 ஸ்பூன் பொடியை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் தனியாக கலக்க வேண்டும். இதையடுத்து கழிவறையை தண்ணீர் ஊற்றி சற்று நனைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், முதலில் கலந்து வைத்திருந்த பொடியை கழிவறை முழுவதும் தூவி விட வேண்டும். இவ்வாறு தூவிய பின்னர், மீண்டும் சற்று தண்ணீர் தெளித்து, துடைப்பம் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் கழிவறை பளிச்சென மாறிவிடும்.
மேலும், இந்த பொடி கலந்து வைத்திருந்த தண்ணீரை பயன்படுத்தி சுவர் மற்றும் பைப் பகுதிகளை கழுவலாம். இப்போது அதில் இருக்கும் கறைகளும் நீங்கி விடும்.