Ways to Save Money on Electricity: சில நேரங்களில் நம் வீட்டில் ஆளே இல்லாத அறையில் மின் விசிறி சுற்றிக்கொண்டிருக்கும். மின் விளக்கு எரியும். இவற்றையெல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லை. மறுபுறம் நம் வருமானத்தின் கணிசமான பகுதியை மின்சாரக் கட்டணமாக செலுத்துகிறோம்.
மின்சாரப் பயன்பாட்டை நம்மால் முடிந்த அளவு கட்டுப்படுத்துவது நமக்கு மட்டுமல்ல. சுற்றுச்சூழலுக்கும் அவசியமான ஒன்று. ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லைட், ஃபேன், வாட்டர் பம்பு ஆகியவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்த முடியும்.
ஆனால், பல மின் உபகரணங்கள், நாம் அதை அணைத்த பின்னும் மின்சாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அணைத்தபின் மின்னிக்கொண்டிருக்கும் லைட், டிவிடி பிளேயர், பிரிண்டர், டிவி, கம்யூட்டர் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.
இதற்கு ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப் உதவும், இவை மின் சாதனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றனவா என்பதை உணரும் தன்மைகொண்டது. பயன்பாட்டில் இல்லை என்று தெரிந்தால், அதற்குச் செல்லும் மின்சாரத்தை முழுமையாக நிறுத்திவிடும். இதன் விலை சுமார் 2,000 ரூபாய் இருக்கும். ஆனால், இது நம் மின் கட்டணத்தை 5% முதல் 10% வரை குறைக்கிறது.
இதுதவிர நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களும் இங்கே உள்ளது.
ஏசி
பெரும்பாலான வீடுகளில் தற்போது ஏசி உள்ளது.
வீட்டின் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் ஏசிக்கு ஆவதால் ஏசியின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடிவைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும்.
வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ ஏசி அறையில் வைக்கக் கூடாது. ஏசியின் அவுட்டோர் யூனிட்டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும்.
வீட்டில் குண்டு பல்புகள் எனச் சொல்லப்படும் டங்க்ஸ்டன் பல்புகளைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
பிரிட்ஜ்
பிரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான குளிர்நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. அடிக்கடி ப்ரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும். ப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் ப்ரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது.
வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்குத் துணிகள் போட்டு வாஷ் பண்ண வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும்.
இண்டக்ஷன் அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.
மின் சாதனங்களை முறையாகக் கையாண்டால் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த முடியும். மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைத்துச் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.