How to Reverse Hair Loss: நம்மில் பலருக்கு தலைமுடி பிரச்னை தான் தலையாயப் பிரச்னை. தலைமுடி வளர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் ’ரிஸ்க்’ எடுக்கலாம் என்பது பலரின் எண்ணம். முடி கொட்டுகிறதே என்ற கவலை ‘ஸ்ட்ரெஸ்ஸாக’ மாறி நாளடைவில் அதுவே முடி கொட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. மருந்துகளையும், கண்ட கண்ட ஷாம்புகளையும் தவிர்த்து, இயற்கையாக தலைமுடி உதிர்வைத் தடுக்க அட்டகாசமான ஐடியாக்கள் இங்கே உங்களுக்காக.
கரிசலாங்கண்ணி
இந்த மூலிகை தலை முடியை வளரச் செய்யும் மற்ற மூலிகைகளுக்கெல்லாம் ‘கிங்’. இது வழுக்கையைத் தவிர்த்து, நரைமுடி வராமல் தடுக்கும். இதை எண்ணெய்யாக காய்ச்சியோ, அல்லது பேஸ்டாக அரைத்தோ தலை முடியில் ‘அப்ளை’ செய்யலாம். காய்ந்த கரிசலாங்கண்ணியில் சிறிது தண்ணீர் விட்டு, ஸ்கால்ப்பில் அப்ளை செய்ய, முடியில் ஃபாலிக்கிள்கள் வலிமை பெறும்.
நெல்லிக்காய்
கூந்தல் உதிர்வைப் பற்றிப் பேசும் போது, மறந்தும் கூட நெல்லிக்காயை மறக்கக் கூடாது. இதிலுள்ள விட்டமின் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்டுகள் உங்களது முடியை டாலடிக்க செய்யும். கூந்தலை ஆரோக்கியமாக, வலிமையாக, பளபளப்புடன் வைத்துக் கொள்ள நெல்லிக்காய் உதவுகிறது. தினம் நெல்லிக்காய் ஜூஸைக் குடிப்பதும், அதன் எண்ணெய்யை தலைக்குத் தேய்ப்பதும் சிறந்த பலனைக் கொடுக்கும். காய்ந்த நெல்லிக்காயை பொடி செய்து, மருதாணி மற்றும் தயிர் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், வலிமையான ஃபாலிக்கிள்களைப் பெறலாம்.
வேம்பு
சருமம் மற்றும் கூந்தலுக்கு வேன்பு இன்றியமையாத ஒன்று. தொடர்ந்து வேம்பைப் பயன்படுத்துவதால், ரத்த ஓட்டம் அதிகரித்து வேர்க்கால்கள் வலிமைப் பெறும். பொடுகு மற்றும் ஸ்கால்ப் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து உங்களை காப்பாற்ற, இதை விட சிறந்த மூலிகை வேறொன்றும் இல்லை. வேப்பிலையை அரைத்தோ அல்லது இலைகளை தண்ணீரில் ஊற வைத்தோ ஸ்கால்ப்பில் அப்ளை செய்யலாம். கைப்பிடியளவு வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிரச் செய்து அந்தத் தண்ணீரால் உங்களது தலைமுடியை இருதியாக அலசலாம். இதை வாரம் மூன்று முறை பின்பற்றி வித்தியாசத்தை உணருங்கள்.
பூந்திக்கொட்டை
நூற்றாண்டுகளுக்கு மேலாக இதை இயற்கை ஷாம்பூவாக பயன்படுத்தி வருகிறார்கள் பெண்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியின் தன்மையும் அடர்த்தியும் அதிகரிக்கும். மிகவும் மென்மையான இதனை அடிக்கடி பயன்படுத்தினாலும் தலைமுடிக்கு சேதம் விளைவிக்காது. சில பூந்திக்கொட்டைகளை தண்ணீரில் போட்டு இரவு முழுதும் ஊற வைத்து பிறகு கொதிக்கவிட்டு, தலையை அலசும் போது ஷாம்பூவாக பயன்படுத்துங்கள்.
சியக்காய்
சியக்காய் கூந்தலுக்கு ஊட்டச்சத்துத் தரும் பழங்கள் போன்றது. தண்ணீருடன் கலந்து இயற்கையான ஷாம்பூவாக இதனைப் பயன்படுத்தலாம். இது இழந்துப்போன ஸ்கால்பின் வலிமையையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த சியக்காயை கூந்தலை அலசப் பயன்படுத்தி, வித்தாயசத்தை நீங்களே உணருங்கள்!
பிறகென்ன கூந்தல் பிரச்னைகளுக்கு ‘குட் பை’ சொல்லி விடுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.