நமது இல்லங்களில் பெரும்பாலும் காய்கறி, மாவு மற்றும் பால் ஆகிய பொருள்களை கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக தான் ஃப்ரிட்ஜ் வாங்குகிறோம். அதன்படி, காய்கறிகளை எப்படி ஃப்ரிட்ஜில் வைக்கலாம் என தற்போது பார்க்கலாம்.
சில காய்கறிகளை நன்றாக கழுவி விட்டு அதன் பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பழைய குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு மூடி போன்ற அமைப்பில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி நெல்லிக்காய், எலுமிச்சை, தோல் சீவி எடுக்கப்பட்ட இஞ்சி போன்றவற்றை அதற்குள் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கலாம். இப்படி வைப்பதால் சுமார் 20 நாள்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
கேரட் போன்ற காய்கறிகளை தோல் சீவி, பிளாஸ்டிக் பாக்ஸின் அடிப்பகுதியில் டிஷ்யூ பேப்பர் வைத்து அதன் மீது வைக்கலாம். இவ்வாறு வைப்பதன் மூலம் காய்கறிகள் நீண்ட நாள்களுக்கு கெடாமல் இருக்கும்.
இதேபோல், பச்சை மிளகாய், சுரைக்காய், கொத்தமல்லி, புதினா போன்ற பொருள்களை ஃபாயில் பேப்பர்களில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் இவை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். இந்த ஃபாயில் பேப்பர்களை பல முறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைகளில் கிடைக்கும் ஸிப் லாக் பைகளை வாங்கிக் கொண்டு, அவற்றில் முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் முருங்கைக்காயும் நீண்ட நாள்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
மேலும், தேங்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு டப்பாவிற்குள் அடைத்து, அதனை ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் வைக்கலாம். இது தேங்காயை நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“