வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயே நம்மில் பலர் அதன் தோல் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், மழைக் காலங்களில் கொசுக்கடியால் நீங்கள் அவதிப்பட்டால், வாழைப்பழத் தோலை குப்பைத்தொட்டியில் வீசுவதற்கு முன் ஒருமுறை யோசியுங்கள். ஆம், வாழைப்பழத் தோல்களில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (anti-inflammatory properties) நிறைந்துள்ளன. இவை கொசுக்கடியால் ஏற்படும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இந்தத் தோல்களில் பாலிசாக்கரைடுகள் (polysaccharides) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidants) போன்ற சேர்மங்கள் உள்ளன, அவை சருமத்தை இதமாக்கி எரிச்சலைக் குறைக்கின்றன.
மும்பையில் உள்ள சர் ஹெச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் தோல் நோய் ஆலோசகர் டாக்டர். சோனாலி கோஹ்லி இது குறித்து கூறுகையில், "கொசுக்கடியில் வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தும்போது, தோலில் உள்ள இயற்கையான என்சைம்கள், கொசு உமிழ் நீரில் உள்ள புரதங்களை உடைத்து, அரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன" என்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
எப்படி பயன்படுத்துவது?
கொசுக்கடியிலிருந்து நிவாரணம் பெற வாழைப்பழத் தோலைப் பயன்படுத்த டாக்டர். கோஹ்லி 2 முறைகளைப் பரிந்துரைக்கிறார். வாழைப் பழத் தோலின் உட்புறத்தை நேரடியாக கொசுக்கடி மீது தேய்க்கலாம். இது அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் அளிப்பதுடன், வீக்கத்தையும் குறைக்கும். வாழைப்பழத் தோலை மசித்து, அதனுடன் சில துளிகள் கிளிசரின் (அ) பன்னீர் கலந்து கொள்ளவும். இந்த பசையை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவி விடவும் அறிவுறுத்துகிறார்.
வாழைப்பழத் தோலுக்கு வேறு நன்மைகள் உண்டா?
வாழைப்பழத் தோல்களில் நன்மை பயக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அவை நமது சருமத்திற்கும் பற்களுக்கும் பல நன்மைகளை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத் தோல்களில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை உள்ளன, அவை பற்களில் உள்ள கறைகளை அகற்ற உதவும். தினமும் சில நிமிடங்கள் வாழைப்பழத் தோலின் உட்புறத்தை உங்கள் பற்களில் தேய்ப்பது காலப்போக்கில் பற்களைப் பிரகாசமாக்கும்.
தோலில் உள்ள இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும், ஊட்டமளிக்கவும் உதவுகின்றன. இது வறண்ட சருமத்திற்கு ஒரு இயற்கையான தீர்வாகப் பயன்படுத்தப்படலாம். வாழைப்பழத் தோல்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பருக்களைக் குறைக்கவும், எதிர்காலத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கவும் உதவும். தோலின் உட்புறத்தைப் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது வீக்கத்தை ஆற்றும் மற்றும் சிவப்பைக் குறைக்கும்.
வாழைப்பழத் தோல்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முன்கூட்டிய வயதாவதற்கு காரணமாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கும்.