திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நடைபெற உள்ள நிலையில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திருசெந்தூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-வது படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் முருகப் பெருமான், சிவனை வழிபட்டு கையில் புஷ்பத்துடன் காட்சி அளிக்கிறார். கடற்கரையோரம் அமைந்துள்ள திருச்செந்தூர் கோயில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.
சூரபத்மனை வதம் செய்து, தேவர்களை காத்த தலம் என்பதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த கந்த சஷ்டி விழா ஐப்பசி மாத அமாவாசை துவங்கி, சஷ்டி வரையிலான 6 நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளில் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். உலகப் புகழ்பெற்ற இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் கூடுவார்கள்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போது, ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் அந்த ஆறு நாட்களும் திருச்செந்தூர் தலத்திலேயே தங்கி, விரதம் இருந்து, முருகப் பெருமானை காலை, மாலை என இரண்டு வேளையும் தரிசன செய்வார்கள்.
இந்த ஆண்டு திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நவம்பர் 2-ம் தேதி தொடஞ்கி நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொடியேற்றத்துடன் தொடங்கும் கந்த சஷ்டி விழா, நவம்பர் 7-ம் தேதி சூரசம்ஹார நிகழ்வும் நவம்பர் 8-ம் தேதி முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். தற்போது முருகப் பெருமானை தரிசிப்பதற்கு பொது தரிசனம், சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 கட்டமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தும் முருகப் பெருமானை தரிசனம் செய்கிறார்கள்.
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திருசெந்தூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அக்டோபர் 3-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் ஆலோசனை, ஆட்சேபனைகள் ஆகியவற்றை தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, விரைவு தரிசனம் கட்டணம் ரூ. 1,000 ஆக உயர்த்தியிருப்பதற்கு பக்தர்கள், பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கட்டண உயர்வை கோவில் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“