முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் 14 ஆண்டுகளுக்கு பிறகு 300 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்றன. இதில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது.
ராஜகோபுரத்திற்கு அருகே கீழ்தளத்தில் தங்க நிறத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் கும்பங்களில் வைக்கப்பட்டு தினசரி காலை, மாலை இரண்டு வேலைகளிலும் யாகசாலை பூஜைகள் சிறப்பு தீபாரணைகள் நடைபெற்றன.யாகசாலை பூஜையில் 150 சிவாச்சாரியார்கள் தினசரி பல்வேறு வேத மந்திரங்களை முழங்கி பூஜை நடத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/86fb2fc8-d6a.jpg)
தினசரி திருப்புகழ்,கந்தர் அனுபூர்தி, பன்னிரு திருமுறைகள் தமிழில் படிக்கப்பட்டன. தொடர்ந்து இன்று அதிகாலை 3:30 மணி முதல் 12 வது கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித நீர் வைக்கப்பட்டிருந்த கும்பங்களை காப்பு கட்டிய சிவாச்சாரியார்கள் தலையில் வைத்து கோவில் மேல் தளத்தில் கொண்டு சென்றனர். அப்போது சிறப்பு வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.
/indian-express-tamil/media/post_attachments/4252df98-3a4.jpg)
தொடர்ந்து கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றும் குடமுழுக்கு நடைபெற்றது. மூலவர் சுப்பிரமணியர் சன்னதி விமானம்,சண்முகர் விமானம், வள்ளி,தெய்வயானை விமானம்,பெருமாள் சன்னதி விமானம், நடராஜர் சன்னதி, விமானம் உள்ளிட்ட பல்வேறு விமானங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது. குடமுழுக்கு நடைபெற்ற போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு டோரான் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது. /indian-express-tamil/media/post_attachments/9ef37769-58a.jpg)
இந்த குடமுழுக்கு விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், உயர் நீதிமன்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை உயர் அலுவலர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுமார் 6000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தி: சக்தி சரவணன்.