திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு அரசர் காலம் முதலே தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம், மரகதம் என விலை மதிக்கமுடியாத அளவிற்கு நகைகளும், விலை உயர்ந்த கற்களும் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி கோயிலில் உண்டியல் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இப்படி உலகில் மிகவும் பணக்கார கோயில்களில் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோயில் இருந்து வருகிறது.
இதனிடையே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது.
எனினும், ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தொடர்ச்சியாக செலுத்தி வந்தனர். கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி வரை ரூ.3.20 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் உண்டியலில் செலுத்தப்பட்டன.
அவற்றை மாற்ற அனுமதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியது. இதற்கு 5 தவணையாக மாற்ற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதன்படி ரூ. 3.20 கோடியை தேவஸ்தானம் மாற்றியுள்ளது.
இதேபோல் பழைய 1000 மற்றும் 500 நோட்டுகளும் திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்டன. ஆனால், ரூ. 500 கோடி வரை செலுத்தப்பட்ட இந்த பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ளவில்லை. எனவே அவை இன்னமும் தேவஸ்தான கிடங்கில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“