உலகின் பணக்கார கடவுளாக திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோடிக்கணக்கில் நன்கொடை கொட்டப்பட்டு வருகிறது. பணமாகவும், நகை உள்ளிட்ட ஆபரணங்களாகவும் நன்கொடை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வைரக் கற்கள் பதித்த தங்க பூணூல் ஒன்று காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஹிந்துஸ்தான் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குனர் புவ்வாடா மஸ்தான் ராவ்- ரேகா தம்பதியினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ 3.86 கோடி மதிப்பில் வைரக் கற்கள் பதித்த 3 கிலோ 860 கிராம் எடையுள்ள தங்க பூணூலை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.
புவ்வடா மஸ்தான் ராவ் மற்றும் அவரது மனைவி கும்கும ரேகா ஆகியோர் இந்த நன்கொடையை வழங்கினர் என்றும், அவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் வைரக் கற்கள் பதித்த தங்க பூணூலை காணிக்கையாக ஒப்படைத்தனர் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, நன்கொடையாளர்களை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு கௌரவித்ததுள்ளார். மேலும் அவர் அவர்களுக்கு ஸ்ரீவாரி தீர்த்த பிரசாதம், புனித நீர் பிரசாதத்தை வழங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரூ.1 கோடி மதிப்பிலான 9 தங்க டாலர்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.