திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது என்பது சாதாரண செய்தி தான். ஆனால் கோடை விடுமுறை முடிந்தும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வந்தது. இதனால் 36 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை நிறைவடைந்துள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்து, விரைவில் சாமி தரிசனம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னமும் கூட்டம் குறைந்தபாடில்லை.
நேற்று 71,824 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28,462 பேர் தலைமுடியை காணிக்கையாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் 4.01 கோடி ரூபாய் உண்டியல் வசூலாக உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது. நேற்று இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் 16 பெட்டிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் 21 பெட்டிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதேபோல் டைம் ஸ்லாட் தரிசனத்திற்காக எட்டு பெட்டிகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். டைம் ஸ்லாட் தரிசனத்திற்கு 4 மணி நேரம் ஆவதாகவும், இலவச தரிசனத்திற்கு சுமார் 12 மணி நேரம் ஆவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு தரிசன சீட்டு பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் செய்ய முடிவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் திருப்பதி செல்ல விரும்புவர்கள் அதற்கேற்றாற்போல் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
இதனிடையே திருப்பதியில் வரும் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்ததுள்ளது. இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை, அங்க பிரதட்சனம், ரூ300 சிறப்பு நுழைவு தரிசனம், ஓய்வறைகள் முன்பதிவு உள்ளிட்டவை நிறைவு பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“