இந்தியாவின் முக்கிய வழிபட்டு தலமாக திருப்பதி இருக்கிறது. திருப்பதியில் இருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து, கண்களை மூடிக்கொண்டு அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் சாப்பிட்டால், பிறவி பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
இந்நிலையில், திருமலை திருப்பதியில் உள்ள லட்டு கவுண்டர்களில் இனி பிரத்யேக ஸ்கேனிங் இயந்திரங்கள் வைக்கப்பட்ட உள்ளது. இனி வரும் நாட்களில் அந்த ஸ்கேனிங் இயந்திரம் மூலன் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்கேனிங் இயந்திரங்கள் வேகமாக லட்டுகளை வழங்கவும், லட்டு விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது.
திருப்பதியில் தற்போது வரை ஆதார் எண் அடிப்படையில் லட்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த நடைமுறையே தொடரப்பட உள்ளது. ஆனால், ஆதார் செயல்முறை இனிமேல் ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் செய்யப்படுகிறது. அதாவது, பிரசாத கவுண்டரில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்பிறகு தான் இயந்திரம் மூலம் லட்டுகளை பெற முடியும். இதன் மூலம், பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கப்பட உள்ளது.
தற்போது திருப்பதியில் 6 கவுன்டர்களில் இந்த ஸ்கேனிங் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை கவுண்டர் எண் 51 முதல் 61 வரை அமைக்கப்பட ஆய்வு நடந்து வருகிறது. இதன் செயல்முறை சிறப்பானதாக அமைந்தால் அனைத்து கவுண்டர்களிலும் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் லட்டு விற்பனையில் நடக்கும் முறைகேடு, இடைத்தரகர்கள், புரோக்கர்களின் தொல்லை குறைய வாய்ப்புள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் டோக்கன் அடிப்படையில் ஒரு லட்டு இலவசமாக வழங்குகிறது. அதிக லட்டுகள் வேண்டுமானால், கவுன்டர்களில் இருந்து வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“