திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட்டுகள் ரூ.300 ஆக தற்போது இருந்து வருகிறது. இந்த சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் பக்தர்கள், பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொது பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க, விஐபி தரிசன இடைவேளை மற்றும் ஆர்ஜித சேவை தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
தற்போது விஐபி டோக்கன் இல்லாத பக்தர்கள், ஸ்ரீவாரி தரிசனத்திற்கு 30 முதல் 40 மணி நேரம் வரை ஆகலாம்.
எனவே பொது பக்தர்களின் பிரச்சினையைத் தீர்க்க, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுப்ரபாத சேவைக்காக வழங்கப்பட்ட விருப்ப ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன் மூலம் 20 நிமிடங்களை மிச்சப்படுத்த முடியும். அதேபோல வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் திருப்பாவாடை சேவை பக்தர்களின்றி நடைபெறுவதால் 30 நிமிடங்கள் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி பேசுகையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது, இதனால் மூன்று மணி நேரம் மிச்சமாகும்.
விஐபி தரிசன இடைவேளையில் தனியாக வரும் விஐபிக்களுக்கு மட்டுமே தினமும் மூன்று மணி நேரம் வழங்கப்படும். இந்த மாற்றங்கள் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“