திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பல விதமான முன்பதிவு டோக்கன்கள், தரிசன டிக்கெட், ட்ராவல் பேக்கேஜ் என்று பயணத் தொகுப்பாக அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு தரிசன டிக்கெட் உடன் பயணங்களை முன் பதிவு செய்யும் வசதிகளும் உள்ளன. தற்பொழுது கோடை விடுமுறை என்பதால் 18 முதல் 30 மணி நேரம் வரை சர்வ தரிசன டோக்கன் பெற்றவர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எப்போது திருப்பதியில் கூட்டம் இல்லாமல், சுலபமாக தரிசனம் செய்ய முடியும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திருப்பதி சென்றால் திருப்பம் ஏற்படும் என்பது பலரின் நம்பிக்கை. அதனால் வாழ்வில் திருப்பம் வேண்டி பக்தர்கள் பலரும் திருப்பதி செல்ல ஆவலுடன் காத்திருப்பார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலை பராமரித்து வருகிறது. திருப்பதி பக்தர்களின் நன்மைக்காக பல மாற்றங்களையும் முன்னேற்பாடுகளையும் அவ்வப்போது செய்து வருகிறது. பல காலங்களாக பக்தர்கள் சந்திக்கும் பிரச்னையாக இருப்பது வெங்கடாஜலபதியை தரிசிக்க பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பதே. திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக முக்கிய காலங்களில், பக்தர்களின் காத்திருப்பு நேரம் 30 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது.
வருடத்தின் 365 நாட்களும் உற்சவம், திருவிழா என நடக்கும் கோவில்களில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்று. இங்கு சராசரியாக தினமும் 70,000 முதல் 80,000 வரையிலான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். வார இறுதி நாட்களில் 90,000 வரையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதுவே சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள் நடக்கும் காலமாக இருந்தால் திருமலைக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்வார்கள். உச்சபட்ச கூட்டம் வருவது ஏப்ரல், மே மாதங்களில்தான்.
3 மாதங்களுக்கு முன்பே தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்வது, முதல்நாள் இரவு சர்வ தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் நின்று, முன்பதிவு இல்லாமல் டோக்கன் பெறுவது வரை, எப்போது திருப்பதி சென்றாலுமே கூட்டமாகத்தான் இருக்கிறது. பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல், பல ஆண்டுகளாகவே நிலவி வருகிறது. திருப்பதியில் எப்போது தரிசனம் செய்வதற்கு கூட்டம் குறைவாக இருக்கும் ஓரிரு மணி நேரங்களில் தரிசனம் செய்யலாம் தெரியுமா?
ஜூன், ஜூலை மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கும் மாதம் என்பதால், பொதுவாகவே திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஜூலை மாதம் திருப்பதி தரிசனத்திற்கு ஏப்ரல் மாதமே முன்பதிவு முடிந்திருக்கும். இதைத் தவிர்த்து இலவசமாக வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன்கள் மற்றும் மலை ஏறுபவர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட் சுலபமாகவே கிடைக்கும். ஜூன், ஜூலை மாதத்தில், சர்வதேசனை டோக்கன் மற்றும் முன்பதிவு இல்லாமல் தரிசனம் செய்பவர்கள் கூட அதிகபட்சமாக 6 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
இதேபோல அக்டோபர் 2-ம் பாதி தொடங்கி, நவம்பர் மாதத்திலும் மற்றும் டிசம்பர் மாதம் முதல் 10 நாட்கள் வரை, அதாவது மார்கழி மாதம் தூங்குவதற்கு முன்பு வரை, பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும். இந்த காலகட்டத்தில் திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் கூட அதிக நேரம் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் சில மணி நேரங்களிலே ஏழுமலையானை தரிசிக்க முடியும். பிப்ரவரி மாதம் மற்றும் மார்ச் மாதம் முதல் 2 வாரங்கள் வரை, நவம்பர் மாதம் போலவே கூட்டம் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். எனவே, இந்த மாதங்களில் ஏழுமலையானை தரிசிக்க டோக்கன்களை முன்பதிவு செய்யவில்லை என்றால் கூட நேரடியாக தரிசன டிக்கெட்டை பெற்று நீண்ட நேரம் காத்திருக்காமல் சுலபமாக தரிசிக்கலாம்.
ஒரு சில பண்டிகை நாட்களில் திருப்பதியில் பெரிய அளவுக்கு பக்தர்கள் வருகை இருக்காது. விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகை நாட்களில், திருப்பதியில் சுலபமாக ஏழுமலையானை தரிசிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.