திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாசெப்டம்பர் 24-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா உத்தரவிட்டார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய பவனில் பாதுகாப்பு, கண்காணிப்பு, தீயணைப்பு சேவைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்புப்படை அதிகாரிகளுடன் ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது..
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், “நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், பொதுவான கட்டளை கட்டுப்பாட்டு அறை மூலம் திருமலையின் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ச்சியான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்” முரளிகிருஷ்ணா வலியுறுத்தினார்.
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரங்களை வழங்கும் நாளில், அவர் திருமலைக்கு வருகை தருவதைக் கருத்தில் கொண்டு, வலுவான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என முரளிகிருஷ்ணா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிரம்மோற்சவ விழாவின்போது, பெரிய சேஷ வாகனம், கருட வாகனம், தேரோட்டம் மற்றும் சக்கர ஸ்நானம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின்போது, ஏழுமலையான் மலைப்பசாமி வாகனச் சேவையை பக்தர்கள் தொந்தரவு இல்லாமல் தரிசனம் செய்ய வசதியாக, கேலரிகளில் முன்னேற்பாடுகள், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை ஒழுங்குப்படுத்த திட்டமிடுமாறு அதிகாரிகளுக்கு முரளிகிருஷ்ணா அறிவுறுத்தினார்.
திருமலையில் பிரம்மோற்சவ நாட்களில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் திருமலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பிரத்யேக பார்க்கிங் மண்டலங்களை ஏற்பாடு செய்யுமாறு பறக்கும்படை மற்றும் பாதுகாப்புத் துறைக்கு முரளிகிருஷ்ணா அறிவுறுத்தினார்.
திருமலை திருப்பதியில் வெங்கடேசப் பெருமாள் வருடாந்திர சாலகட்ல பிரம்மோற்வங்கள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகவுகளான, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 16-09-2025 நடைபெறுகிறது. அங்குரார்ப்பணம் 23-09-2025 அன்று நடைபெறுகிறது. 24-09-2025-ல் த்வஜரோஹணம் நிகழ்வும், 28-09-2025-ல் கருட வாகன சேவையும், 01-10-2025-ல் ரதோத்சவம் நிகழ்வும் 02-10-2025-ல் சக்ரஸ்நானம் நிகழ்வும் நடைபெறுகிறது.
வாகன சேவைகள் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதால், நெறிமுறை பிரமுகர்களைத் தவிர, அனைத்து பிரம்மோத்சவ நாட்களிலும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான் அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்கள், உடல் ரீதியான ஊனமுற்றோர், கைக்குழந்தைகளுடன் பெற்றோர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அல்லது நன்கொடையாளர்கள் உள்ளிட்ட எந்த சலுகை தரிசனங்களும் இல்லை.