திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச., 23ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று (நவ.10) தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்படும்.
இதற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள், இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 22 ,500 என்ற எண்ணிக்கையில் பத்து நாட்களுக்கும் சேர்த்து 2,25,300 ரூபாய் டிக்கெட் வெளியிடப்படும்.
மேலும், இலவச தரிசனம் மூலம் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம்.
இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் தற்போது செயல்படும் கவுண்டர்களுடன் கூடுதலாக கவுண்டர்கள் அமைக்கப்படும். அவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 42,500 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 4,25,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்
இலவச தரிசன டோக்கன்கள், நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல் இன்று மாலை 3 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.
தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.