/indian-express-tamil/media/media_files/tirupathi-3.jpg)
இந்தியாவில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் முக்கிய ஆன்மீக தளங்களில் ஒன்று திருப்பதி. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். வாழ்வில் ஒருமுறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் பெற விரும்பும் பக்தாகள் பலகோடி இருக்கிறார்கள்.
அதே சமயம் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதால், பலரும் கூட்ட நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க, கட்டண மற்றும் முன்பதிவு செய்து தரிசனம் பார்ப்பார்கள். குறிப்பாக வி.ஐ.பி தரிசனம் கிடைத்தால் அந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஆனால் வி.ஐ.பி தரிசனம் கிடைப்பது இதுவரை சவாலா இருந்திருந்தாலும் தற்போது அதற்கு எளிமையான ஒரு வழியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பு இளைஞர்களுக்காக வழங்கப்படுகிறது.
25 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஒரு அசத்தலான வாய்ப்பை வழங்கியுள்ளது. அதுதான் 'கோவிந்தகோடி' எனப்படும் ஆன்மீக சவால். இந்தத் திட்டத்தின்படி, இளைஞர்கள் 10,01,116 முறை 'கோவிந்தா' என்ற நாமத்தை எழுத வேண்டும். இது ஒரு சாதாரண எண்ணிக்கை அல்ல, ஆழ்ந்த பக்தியையும், பொறுமையையும் சோதிக்கும் ஒரு தவ முயற்சி. இந்த எண்ணிக்கை முடிந்ததும், அவர்கள் தாங்கள் எழுதிய கோவிந்தகோடி புத்தகங்களை திருமலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் பேஷ்கார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் வெகுமதியாக, அந்த இளைஞர்களுக்கு அடுத்த நாளே வி.ஐ.பி பிரேக் தரிசனம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த ஆன்மீக சாதனைக்கு ஒரு படி மேலே சென்று, ஒரு கோடி (1,00,00,000) முறை 'கோவிந்தா' நாமத்தை எழுதுபவர்களுக்கு, அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் வி.ஐ.பி தரிசனம் பெறலாம்.
பொதுவாக ஒரு 200 பக்க கோவிந்தகோடி புத்தகத்தில் சுமார் 39,600 நாமங்களை எழுத முடியும். 10,01,116 என்ற இலக்கை அடைய, பக்தர்கள் சுமார் 26 புத்தகங்களை நிரப்ப வேண்டியிருக்கும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த கோவிந்தகோடி பணியை முழுமையாக முடிக்க குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும். தீவிர பக்தியும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இந்த ஆன்மீக சவாலை வெல்ல முடியும். இந்த கோவிந்தகோடி புத்தகங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கின்றன.
இந்த சவாலை முதன்முதலில் முடித்த பெருமை கர்நாடகாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற 17 வயது மாணவியை சேரும். பெங்களூரில் தனது இடைநிலைக் கல்வியை முடித்த அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே தனது முதல் தொகுதி கோவிந்தகோடி புத்தகங்களை சமர்ப்பித்தார். அதற்கு பரிசாக அவருக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனம் கிடைத்தது. அதோடு அவர் நிற்கவில்லை. இதுவரை இரண்டு முறைக்கு மேல் கோவிந்தகோடி நாமாவை எழுதி பலமுறை வி.ஐ.பி தரிசனம் பெற்றுள்ளார் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு இளம் பக்தர்கள் இந்த சாதனையை நிகழ்த்தி, இளைஞர்களின் பக்திக்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பேஷ்கார் ராமகிருஷ்ணா கூறுகையில், இந்த முயற்சி வெறும் தரிசனம் பெறுவதற்கான வழி மட்டுமல்ல, இளைஞர்களிடையே ஆன்மீக ஒழுக்கத்தை ஆழப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம். "இது அர்ப்பணிப்பு மற்றும் நேரத்தின் மூலம் தெய்வீகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கும் ஒரு வழி," என்று அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.