உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாத ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை (18.03.2025) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி எழுமலையானை தரிசிக்க திட்டமிட்டுள்ளவர்கள் உடனடியாக புக் பண்ணுங்கள்.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “ஜூன் மாத சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனை மற்றும் அஷ்டதல பாத பத்மாராதன சேவா டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மார்ச் 18-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
இந்த சேவா டிக்கெட்டுகளுக்கான லக்கி டிப் பதிவுக்கான ஆன்லைன் பதிவை மார்ச் 18 முதல் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.
லக்கி டிப் மூலம் இந்த டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள் மார்ச் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு முன் தொகையை செலுத்தினால் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாணயோத்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவை டிக்கெட்டுகளுக்கான ஜூன் மாத ஒதுக்கீடு மார்ச் 21-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
ஜூன் 9 முதல் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் ஸ்ரீவாரி ஜேஷ்டாபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் மார்ச் 21-ம் தேதி காலை 11 மணிக்கு கிடைக்கும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மெய்நிகர் சேவைகள் மற்றும் அவர்களின் தரிசன இடங்களை மார்ச் 21-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடும்.
மார்ச் 22-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கபிரதக்ஷிணம் டோக்கன்களுக்கான ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிடும்.
மார்ச் 22-ம் தேதி காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)வெளியிடும்.
மார்ச் 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வயதானவர்கள், உடல் ஊனமுற்றோர் தரிசன டோக்கன்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிடும்.
மார்ச் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிடும்.
திருமலை மற்றும் திருப்பதியில் தங்குவதற்கு மார்ச் 24-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒதுக்கீடு வெளியிடப்படும்.
ஸ்ரீவாரி அர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.