Tirunelveli Halwa Tamil News, Tirunelveli Halwa Making Video: அல்வா என்கிற பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும். திருநெல்வேலி அல்வா என்றால், அதன் சுவை பற்றி கேட்கவே வேண்டாம். வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் தினமும் டன் கணக்கில் ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கிறது திருநெல்வேலி அல்வா.
Advertisment
இருட்டுக்கடை அல்வா, சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா ஆகியன இங்கு ஃபேமஸ். திருநெல்வேலி அல்வாவின் அசாத்திய சுவைக்கு தாமிரபரணி தண்ணீரும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனினும் நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், இந்த செய்முறையை கடைபிடித்தால் ஓரளவு திருநெல்வேலி அல்வா சுவையை ருசிக்க முடியும்.
Tirunelveli Halwa Making Video: திருநெல்வேலி அல்வா
திருநெல்வேலி அல்வா செய்யத் தேவையான பொருட்கள்: நெய் - 300 கிராம், கோதுமை - 200 கிராம், சீனி - 600 கிராம், தேவையான அளவு நெய்யில் வறுத்த முந்திரி.
Advertisment
Advertisements
செய்முறை இதுதான்... சுத்தமான கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு ஊற வையுங்கள். கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். (இதற்கான வசதி இல்லாதவர்கள் மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள்).
கோதுமையை நன்கு அரைத்தால் பாலாக பொங்கும். அதை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும். இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும். அந்த நீரை நீக்கி விடுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது, நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும்.
அப்போது அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். நல்ல பக்குவத்தில் வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் ஒரிஜினினல் திருநெல்வேலி அல்வாவின் ருசி அப்படியே இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கும், மொத்த குடும்பத்திற்கு திருநெல்வேலி அல்வா அற்புத தித்திப்பான பதார்த்தமாக இருக்கும். உறவினர் வீடுகளுக்கு இப்படி வீட்டில் செய்த அல்வாவை எடுத்துச் சென்றால், உங்கள் அன்பில் திக்கு முக்காடுவார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"