இந்தியாவில் மிகவும் பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதியில், அன்னதான திட்டத்திற்காக நனகொடை தொடர்பான அறிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதில் காலை, மதியம் மற்றும் இரவு நேர அன்னதானத்திற்கு வசூலிக்கப்படும் தொகைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னபிரசாதம் அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வர கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச, சுகாதாரமான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்காக ஒரு நாள் நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நன்கொடி அளிப்பவர்கள், தனிப்பட்ட முறையில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் பரிமாறலாம்
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், வெங்கமாம்பா அன்னபிரசாதம் பவனில் நடைபெறும் முழு நாள் அன்னபிரசாத விநியோகத்திற்கு பக்தர்கள் ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கலாம் என்று அறிவித்துள்ளது. அவ்வாறு ஒருநாள் அன்னப்பிரசாதத்திற்கு நன்கொடை அளிப்பவர்கள், தனிப்பட்ட முறையில் அவர்களே பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறவும் வாய்ப்பு கிடைக்கும், மேலும் அவர்களின் பெயர்கள் வெளியில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நன்கொடை விவரம்
காலை உணவிற்கு ரூ.10 லட்சம்
மதிய உணவிற்கு ரூ.17 லட்சம்
இரவு உணவிற்கு ரூ.17 லட்சம்
இந்த முயற்சி, கோயிலின் சேவை மரபின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவச பிரசாதத்தைப் பெறுவதை உறுதி செய்வதோடு, பரோபகார பங்களிப்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான வலைத்தளத்தின்படி, வெங்கடேஸ்வர நித்ய அன்னதானம் அறக்கட்டளைத் திட்டம், 6-4-1985 அன்று டி.டி.தேவஸ்தானங்களால் அப்போதைய ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ நந்தமுரி தாரக ராமராவ் அவர்களால் திருமலையில் ஒரு நாளைக்கு 2,000 யாத்ரீகர்களுக்கு இலவச உணவு வழங்கி இந்த அன்னப்பிரசாத திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் 1-4-1994 முதல் "ஸ்ரீ வெங்கடேஸ்வர நித்ய அன்னதானம் அறக்கட்டளை" என்ற பெயரில் ஒரு சுயாதீன அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. நிர்வாக அதிகாரி, டி.டி.டி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். அறக்கட்டளையின் பெயர் 1-04-2014 முதல் "ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னபிரசாதம் அறக்கட்டளை" என மாற்றப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளை உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் / நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. அறக்கட்டளை அனைத்து நன்கொடைகளையும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்கிறது, மேலும் அதில் கிடைக்கும் வட்டி அறக்கட்டளையின் செலவினங்களைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.