திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு குறித்து தேவஸ்தானம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமாக தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் கோவில்களில் முக்கியமானது திருப்தி. இந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பாக அவ்வப்போது சில அதிரடி மாற்றங்களும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பதிக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக நிர்வகிக்கப்பட்டு வரும் 7,500 தங்கும் அறைகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பருகின்றன. ஆனால், இடைத்தரகர்கள் மூலமாக அறைகள் ஒதுக்கப்படுவதில் மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆதார் அட்டையுடன் சேர்த்து தரிசன டிக்கெட்டும் கட்டாயம் என்று அறிவித்திருந்தது.
மேலும் இந்த புதிய நடைமுறை மூலம் தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக அறையை காலி செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர் மற்ற பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும் என்றும் இந்த நடவடிக்கையின் வாயிலாக தேவஸ்தானத்தின் வருமானம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திருப்பதியில் வழங்கப்படும் அன்னதானம், இனி பக்தர்களும் வழங்கலாம் என்றும், ஒரு நாள் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கினால் பக்தர்களுக்கு தங்கள் கையால் பரிமாறலாம் என்றும் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிறப்பு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரிசனத்திற்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் ஆன்லைனில், வசதிகள் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் தற்போது வரும் ஜூன் மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்த தேவஸ்தான் அறிவித்துள்ளது,
அதன்படி ஜூன் மாதம் திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய நாளை முதல் (மார்ச் 24) திருப்பதி தேவஸ்தான் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடை விடுமுறை முடிந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.