திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோயில் போல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் கடற்கரை ஓரம் கோயில் எழுப்பப்பட்டு, திருப்பதியில் செய்வது போல் பூஜை வழிபாடுகள் இங்கும் செய்யப்படும்.
கடந்த 3 நாட்கள் நடைபெற்று வந்த "பவித்ரோற்சவம்" நேற்று (நவ.25) நிறைவு பெற்றது. உள்ளூர் மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுலா பயணிகள் என 1000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை திருப்பதி தேவஸ்தான உள்ளுர் கமிட்டி தலைவர் சேகர் ரெட்டி நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனோவுக்கு பின் இப்போது திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தரிசனம் முன்பதிவுக் கட்டணம் ரூ.300 ஆக உள்ளது. இதை உயர்த்தும் எண்ணம் இல்லை. இலவச தரிசனத்திற்கு தான் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்கிறது.
கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பவித்ரோற்சவம் நடந்து வந்தது. நேற்று இரவு 8 மணி அளவில் நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களாக தினசரி 3000க்கும் அதிகமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும் காலை, மதியம், இரவு உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
திருப்பதியில் உள்ளது போல் கன்னியாகுமரி கோவிலிலும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணம் ரூ.3000 மட்டுமே. அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. இதுவரை 3 திருமணங்கள் இங்கு நடந்துள்ளன. இது குறித்து பொதுமக்களுக்கு அதிகமாக தெரிவிக்க உள்ளோம். ஜனவரி மாதம் முதல் தினசரி "லட்டு"விற்பனை தொடங்கப்பட உள்ளது. இதற்காக திருப்பதியில் இருந்து 5000-ம் லட்டுகள் கொண்டு வந்து லட்டு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும்.
கன்னியாகுமரி வெங்கடேஸ்வரா திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தானமே பேருந்து இயக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. உடனடி ஏற்பாடாக தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க இருக்கிறோம்" என சேகர் ரெட்டி தெரிவித்தார்.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“