Tirupati News: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம். பக்தர்கள் தேவஸ்தானம் சார்பாக வாடகைக்கு விடப்படும் அறைகளில் தங்கி, சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கும் வாடகை அறைகளுக்கான முன்பதிவை ஆன்லைனில் பதிவு செய்த பின்னர், நேரடியாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று, அங்குள்ள மத்திய விசாரணை மையத்தில் அவர்களின் ஆன்லைன் முன்பதிவு படிவத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு, துணை விசாரணை அலுவலகத்துக்கு சென்று அறைகளை பெறுவது வழக்கமாக இருந்தது.
இதனிடையே, வாடகை அறைகளை முன்பதிவு செய்யும் வழிமுறைகளில் திருப்பதி தேவஸ்தானம் மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. இனி, ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்த பின்னர், அங்கும் இங்கும் பக்தர்கள் அலையத் தேவையில்லை. பக்தர்கள் அறை முன்பதிவு டிக்கெட்டுகளை எளிதில் ஸ்கேன் செய்து அறைகளை பெறுவதற்காக, திருப்பதி தேவஸ்தானம், அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி ஆகிய இடங்களில் ஸ்கேன் மையங்களை அமைத்துள்ளது.
தேவஸ்தானத்தால் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து, பக்தர்கள் தேவஸ்தானம் செல்லும் முன் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இதன் மூலம், பக்தர்கள் மத்திய அலுவலகத்துக்கு சென்று அலைந்து திரியாமல், துணை அலுவலகத்துக்கு சென்று எளிமையான முறையில் அறைகளை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil