இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி கோவில், நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதியில், காணிக்கையாக சொத்துக்ளை எழுதி வைப்பது என பலரும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
அதே சமயம் திருப்பதி செல்ல வேண்டும் என்றால் தரிசனம் பார்க்க 3 மாதத்திற்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியம். திருப்பதியில் ஆண்டு முழுவதும் விசேஷமான நாட்கள் தான் என்றாலும் கூட, திருப்பதி தேர் திருவிழா, வைகுண்ட ஏகாதாசி உள்ளிட்ட நாட்களில், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் திரண்டு இருக்கும். இந்த நாட்களில் தரிசனம் செய்ய சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது.
அந்த வகையில் தற்போது திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தினத்தில், தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் இடம் ஒதுக்கீடு தொடர்பான தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 10 முதல் 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்துக்காக ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் 23-ந்தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மேலும் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்துக்கான ரூ.300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மார்ச் மாதத்துக்கான ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 –க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 25-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
அதேபோல் மார்ச் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 26-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் ஒதுக்கீடு அன்றைய தினம் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். இந்த மாற்றத்தைக் கண்டு, பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in -ல் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“