/indian-express-tamil/media/media_files/2025/08/21/tirupati-temple-3-2025-08-21-22-01-34.jpg)
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பக்தர்கள் ஏழுமலையானை 1 முதல் 2 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. Photograph: (TTD)
திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசிக்க, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு புதன்கிழமை (20.08.2025) ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனைப்படி, கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் நித்ய அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பக்தர்கள் ஏழுமலையானை 1 முதல் 2 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஏழுமலையான் தரிசனம் மற்றும் பிரசாத விற்பனை தொடர்பாக நடக்கும் இணைய குற்றங்களைத் தடுக்க திருமலையில் 'சைபர் செக்யூரிட்டி லேப்' தொடங்கப்பட உள்ளது.
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலையில் டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு அதே நாளில் மாலை சுவாமி தரிசனம் கிடைக்கும்.
கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் நித்ய அன்னதானம் வழங்க திருமலை தேவஸ்தானம் ரூ.4 கோடி ஒதுக்கியுள்ளது.
கடந்த ஜெகன் ஆட்சியில் திருமலையில் அவரது கட்சிக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 12 ஓட்டல்கள் ரத்து செய்யப்பட்டு, இ-டெண்டர் மூலம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.” என்று கூறினார்.
ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் ஸ்ரீ திருமலை நம்பியின் 1052வது அவதார மகோற்சவம்
தலைசிறந்த வைணவ ஆச்சார்யரான ஸ்ரீ திருமலை நம்பியின் 1052வது அவதார மகோற்சவம், ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திருமலையின் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ திருமலை நம்பி கோயிலில் கோலாகலமாக அனுசரிக்கப்பட உள்ளது.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 16 தலைசிறந்த அறிஞர்கள் கோயில் வளாகத்தில் ஸ்ரீ திருமலை நம்பியின் வாழ்க்கை வரலாறு குறித்து சொற்பொழிவுகளை நிகழ்த்த உள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் முதன்மையான பக்தர்களில் ஒருவரான ஸ்ரீ திருமலை நம்பி, ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு தீர்த்த கைங்கர்யத்தை (புனித நீர் வழங்கும் சேவை) தொடக்கி வைத்த பெருமைக்குரியவர். இவர் பகவத் ராமானுஜரின் தாய் மாமா மற்றும் மதிப்புமிக்க குரு ஆவார். சாஸ்திரங்களின்படி, இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு ராமாயணத்தையும் உபதேசம் செய்தவர் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.